கொரோனா வைரஸ் : தமிழக மருத்துவர்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

கொரானா வைரஸுக்கு தமிழகத்தில் மருந்து கண்டுபிடிக்கும்படி மருத்துவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தமிழக சுகாதார துறையின் சார்பில் தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

2,587 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டத்தை சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், தமிழக அரசு சுகாதார துறையின் திட்டங்களால் கவரப்பட்டு, அண்டை மாநில அரசுகளும் அவற்றை செயல்படுத்தி வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.

இன்று தொடங்கப்பட்டுள்ள சுகாதார சீரமைப்பு திட்டத்தின் கீழ் அனைத்து மருத்துவமனைகளுக்கும் தர சான்றிதழ் வழங்கப்படும் என்றும், அவசரம் மற்றும் தலை காயத்துக்கான சிகிச்சை, தொற்றா நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு இந்த திட்டத்தில் முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸுக்கு உலகில் இதுவரை யாரும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என கூறிய முதலமைச்சர், தமிழகத்தில் அதற்கான மருந்தை தங்களது திறமையால் மருத்துவர்கள் கண்டுபிடித்து நாட்டிற்கே முன்னுதாரணத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே