திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற வருடாந்திர பிரம்மோற்சவ நிகழ்ச்சியில் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் கடந்த 30-ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
இதையடுத்து ஸ்ரீதேவி – பூதேவி சமேத மலையப்ப சுவாமி பெரிய சேஷம், சின்ன சேஷம், அன்ன, சிம்ம, முத்துப்பந்தல், கற்பகவிருட்சம், கருட, அனுமந்த, கஜ உள்ளிட்ட 14 வாகனங்களில் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான நேற்று ஏழுமலையான் கோவில் தெப்பக்குளத்தில் நடைபெற்ற சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர்.
இதையடுத்து இரவில் பிரம்மோற்சவ விழாவை காண முக்கோடி தேவதைகளுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஏற்றப்பட்ட பிரம்மோற்சவ கொடியை வேத மந்திரங்கள் முழங்க அர்ச்சகர்கள் கீழே இறக்கினர்.
இத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.