மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் ஹெலிகாப்டரில் பறந்து பறந்து சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பகலில் மயிலாடுதுறையில் பிரச்சாரம் செய்த அவர் பின்னர், இரவில் திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் வீரசக்திக்கு வாக்கு கேட்டு மலைக்கோட்டை பகுதியில் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

பிரச்சார கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், ஏழ்மையை வெகு ஜாக்கிரதையாக அரசியல் கட்சிகள் பாதுகாக்கின்றன. அதனால்தான் ஏழ்மையின் மீது எனக்கு கோபம் இருக்கிறது.

நேர்மை என்பது பசி போல் தினமும் இருக்க வேண்டும். நேர்மையோடு வாழ வேண்டும் என்றார்.

உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் நான் நடித்துள்ளேன். அந்த வகையில் அவர்களோடு தொடர்பு வைத்திருக்கிறேன் என்பதற்காக நான் ஊழல் செய்து விடுவேனா? அது வேறு இது வேறு.

தமிழில் வசனம் எழுத ஆள் இல்லாததால் வட நாட்டிலிருந்து, தேர்தல் வெற்றிக்காக ஒரு ஆளை அழைத்து வந்துள்ளார்கள் என அவர் சாடினார்.

லேடியா? மோடியா? என ஜெயலலிதா பேசினார். நான் இப்போது கேட்கிறேன் மோடியா? இந்த தாடியா ? மத்திய அரசை தைரியமாக கேள்வி கேட்க ஆள் வேண்டும். ரெய்டு விட்டால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மீதும் கமல்ஹாசன் மீது விடுங்கள்.

பக்கத்து வீட்டுக்காரர்கள் மீது விடாதீர்கள். இலவசங்கள் உங்கள் ஏழ்மையை போக்கவே போக்காது. நான் மீன் பிடிக்க கத்து தருகிறேன். நேர்மையின் மீட்சிக்காக நாங்கள் ஆட்சியை பிடிக்க விரும்புகிறோம் என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே