கண்ணீர் விட்டு கதறி அழுத என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ..!!

கூட்டணி கட்சியான பாஜகவுக்கு தொகுதியை ஒதுக்குவதால் தனக்கு போட்டியிட வாய்ப்பு இல்லாததை அறிந்து என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ கண்ணீர் விட்டு தனது ஆதரவாளர்களிடமும், பத்திரிக்கையாளர்களிடமும் அழுதார்.

இதைத்தொடர்ந்து அவருக்கு போட்டியிட வாய்ப்பு தரக்கோரி கட்சித்தலைவர் ரங்கசாமியை செல்வத்தின் ஆதரவாளர்கள் இன்று முற்றுகையிட்டனர்.

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸுக்கு 16 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பாஜக- அதிமுகவுக்கு இடையே 14 இடங்களை ஒதுக்கி வெளிப்படையாக தொகுதி பங்கீடு அறிவிக்கப்படவில்லை.

இச்சூழலில் வில்லியனூர் தொகுதியில் போட்டியிட்டு வந்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்ததால் தொகுதியை மாற்றி போட்டியிட உள்ளார்.

அதன்படி மண்ணாடிப்பட்டு தொகுதியில் பாஜக சார்பில் நமச்சிவாயம் போட்டியிட உள்ளதாக வில்லியனூர் தொகுதியில் ஆதரவாளர்களிடம் கண்ணீருடன் தெரிவித்து நேற்று மாலை விடை பெற்றார்.

இதையடுத்து திருக்கனூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று இரவு மண்ணாடிப்பட்டு தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ செல்வம் ஆதரவாளர்களுடன் கூட்டம் நடத்தினார்.

கடந்த 2011 முதல் தொடர்ந்து இரு முறை இங்கு செல்வம் வென்றுள்ளார்.

கூட்டத்தில் ஆதரவாளர்களிடம் பேசுகையில், “பத்து ஆண்டுகளாக குடும்பத்தை கூட கவனிக்காமல் பணியாற்றினேன். தற்போது வாய்ப்பு கிடைக்கவில்லை” என்று குறிப்பிட்டு கண்ணீர் விட்டு அழத்தொடங்கினார்.

அவரை ஆதரவாளர்கள் தேற்றினர்.

அதைத்தொடர்ந்து பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போதும், தொகுதியில் போட்டியிட இம்முறை வாய்ப்பு இல்லை என்பதை தெரிவித்து கண்ணீர் விட்டு அழுதார். தொடர்ந்து பல முறை அழுதபடி இருந்தார் செல்வம். “இரு நாட்கள் பொறுத்து இருக்குமாறு ரங்கசாமி கூறியுள்ளார்.

அதுவரை காத்துள்ளேன். சதிகார கூட்டத்தில் அவர் மாட்டியுள்ளாரோ என்ற அச்சம் எழுகிறது. அதிலிருந்து அவர் மீண்டு வர வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில் எம்எல்ஏ செல்வத்தின் ஆதரவாளர்கள் கட்சித்தலைவர் ரங்கசாமியை இன்று முற்றுகையிட்டு, மண்ணாடிப்பட்டு தொகுதியில் மீண்டும் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிட வாய்ப்பு தர வலியுறுத்தினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே