ராக்கெட் ஏவுதலில் பங்காற்றிய தொழில்நுட்ப பணியாளர்களுக்கு நன்றி – இஸ்ரோ தலைவர்

கரோனா பெருந்தொற்றுக்கிடையே சமரசமின்றி பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் சிவன் நன்றி தெரிவித்துள்ளார்.

விண்வெளிப் பணிகளை வீட்டில் இருந்தவாறே செய்ய இயலாது என்றும், குறைந்த எண்ணிக்கையிலான பொறியாளர்களைக் கொண்டு பணிகளை நிறைவு செய்ததாகவும் கூறினார்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிற்பகல் 3.12 மணிக்கு பி.எஸ்.எல்.வி.-சி 49 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

இதில் செலுத்தப்பட்ட 10 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவரை ஒருவர் கைக்குலுக்கிப் பாராட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டனர்.

பிறகு இஸ்ரே தலைவர் சிவன் பேசியதாவது, ”பி.எஸ்.எல்.வி.-சி 49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த ராக்கெட் இஸ்ரோவிற்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. கரோனா பெருந்தொற்றுக்கிடையே மிகக்குறைந்த கால இடைவெளியில், குறைந்த எண்ணிக்கையிலான பொறியாளர்களைக் கொண்டு பணிகளை நிறைவு செய்தோம்.

இஸ்ரோவில் சமரசமின்றி பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கும், ராக்கெட் ஏவுதலில் பணியாற்றிய அனைத்து பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

கரோனா பரவி வரும் சூழலில் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து தரத்தில் சமரசமின்றி பணியாற்றினோம்.

இஸ்ரோ பணியாளர்களின் தரமான பணி மகிழ்ச்சியளிக்கிறது” என்று கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே