4 விக்கெட்டுகளை சாய்த்த சோதி! முதல் டி20 போட்டியில் வங்கதேசத்தை வென்றது நியூசிலாந்து!

வங்கதேச கிரிக்கெட் அணி தீவு தேசமான நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரை வங்கதேச அணி இழந்தது. இந்நிலையில் இன்று ஆரம்பமான டி20 தொடரின் முதல் போட்டியில் அந்த அணி வீழ்ச்சி அடைந்துள்ளது. 

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்களை குவித்தது அந்த அணி. அதிகபட்சமாக டேவோன் கான்வே (Devon Conway) 52 பந்துகளில் 92 ரன்களை குவித்தார். வில் யங் 30 பந்துகளில் 53 ரன்களை குவித்தார். கப்டில் 35 ரன்களை குவித்தார். 

தொடர்ந்து விளையாடி வங்கதேச அணிக்கு சீரிய இடைவெளியில் விக்கெட் விழுந்து கொண்டே இருந்தது. அஃபீஃப் ஹுசைன்  மற்றும் முகமது சைபுதீன் ஆகிய இருவர் மட்டுமே 63 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். தொடக்க வீரர் முகமது நைம் 27 ரன்களை குவித்தார். மற்ற அனைவரும் மோசமாக விளையாடி இருந்தனர். நியூசிலாந்து அணிக்காக சுழற்பந்து வீச்சாளர் இஷ் சோதி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது பந்து வீச்சு அந்த அணியின் வெற்றிக்கு உதவியது.

பவர் பிளேயின் கடைசி ஓவர் மற்றும் 8வது ஓவர் என இரண்டு ஓவர்களில் மட்டும் அவர் அந்த நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். கிட்டத்தட்ட அப்போது நியசிலந்து அணியின் வெற்றி உறுதியாக விட்டது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே