டெஸ்லா கார்கள்- பார்க்கிங்கில் இருந்து தானியங்கி முறையில் வரவழைக்கும் வசதி

டெஸ்லா கார்களை பார்க்கிங்குகளில் இருந்து தானியங்கி முறையில் வரவழைக்கும் வசதியைப் பயன்படுத்துவதில் உள்ள புகார்கள் குறித்து அமெரிக்காவின் தேசிய நெடுஞ்சாலைப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பான என்.எச்.டி.எஸ்.ஏ. விசாரணை மேற்கொண்டுள்ளது.

டெஸ்லா கார்கள் உரிமையாளர் இருக்கும் இடத்தில் இருந்து 200 அடி தூரத்திலும் உரிமையாளரின் பார்வை எல்லையிலும் இருந்தால், செல்போன்- ஆப் மூலம் அதனை கட்டுப்படுத்தி அருகில் வரவழைக்கும் வகையில் மென்பொருள் கடந்தவாரம் மேம்படுத்தப்பட்டது.

இந்நிலையில் பல்வேறு டெஸ்லா கார் உரிமையாளர்கள் தங்கள் கார்கள் தானியங்கி வரவழைப்பு இயக்கத்தின் போது விபத்துக்குள்ளானதாகக் கூறி வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும், டெஸ்லா நிர்வாகத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் என்.எச்.டி.எஸ்.ஏ. தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து டெஸ்லா நிறுவனம் பதில் அளிக்காத போதும் எலன் மஸ்க் தனது டிவிட்டர் பதிவில், இந்த வசதி அறிமுகமாகி முதல் சில நாட்களில் 5 லட்சத்து 50 ஆயிரம் முறை கார்களின் உரிமையாளர்கள் தங்கள் கார்களை சிறப்பான முறையில் வரவழைத்ததாக தெரிவித்துள்ளார்.

கார்கள் வரவழைப்பு செயல்பாடு தொடர்புடைய கார் உரிமையாளரின் தெளிவான பார்வைக் கட்டுப்பாட்டில் இருக்கும்போதும் காரின் சுற்றுப்புறத்தை ஆய்வு செய்த பிறகும் மட்டுமே மேற்கொள்ளப்படவேண்டும் என்று தெரிவித்துள்ள டெஸ்லா நிறுவனம், செயலியின் பட்டனில் இருந்து விரலை எடுத்துவிட்டால் காரின் இயக்கம் நின்றுவிடும் என்று கூறியுள்ளது.

எனினும் அனைத்து தடைகளையும் உணரும் என சொல்ல முடியாத நிலையில் காரின் மீது உரிமையாளர்களுக்கு முழு பொறுப்பும் இருப்பதால் அவர்கள் முழு கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே