தமிழகத்தில் ஏப்.4-ம் தேதி வரை 21 மாவட்டங்களில் 9 டிகிரி வரை வெப்பம் உயரும்: ஒருசில இடங்களில் அனல் காற்று வீச வாய்ப்பு

தமிழகத்தில் ஏப்.1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட21 மாவட்டங்களில், வழக்கத்தைவிட 9 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஏப்.4-ம் தேதி வரைவறண்ட வானிலையே நிலவும். வடமேற்கு திசையிலிருந்து தமிழகப் பகுதி நோக்கி தரைக்காற்று வீசி வருகிறது.

ஈரோட்டில் 110 டிகிரி

30-ம் தேதி மாலை 5.30 மணியுடன்நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 110 டிகிரிஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. காஞ்சிபுரம், சேலம், கரூர் பரமத்தி ஆகிய இடங்களில் தலா 109, வேலூர், திருத்தணியில் 106,திருச்சி, மதுரை விமான நிலையம், திருப்பூர், தருமபுரி ஆகிய இடங்களில் தலா 105, நாமக்கல், அரியலூர் ஆகிய இடங்களில் தலா 104,சென்னை விமான நிலையத்தில் 103, கடலூரில் 101, கோவையில் 100 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

ஏப்.1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை கடலோர மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களான காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 21 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை உயரக் கூடும். அதிகபட்சவெப்பநிலையானது வழக்கத்தைவிட 5 முதல் 9 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக் கூடும்.

அதேபோல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக ஒருசில இடங்களில் அனல்காற்று வீசும். பொதுமக்கள், விவசாயிகள், வேட்பாளர்கள், வாக்காளர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் பகல் 12 மணிமுதல் மாலை 4 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வது, ஊர்வலம் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மத்திய அந்தமான் கடல் பகுதியில் தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தப் பகுதியாக வலுப்பெற உள்ளது. இதனால் அப்பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. எனவே அந்தமான் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

ஏப்.1, 2-ம் தேதிகளில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே