முன்னாள் பிரதமர் தேவ கவுடாவுக்கு கரோனா பாதிப்பு: மனைவிக்கும் தொற்று ஏற்‍பட்டதால் மருத்துவமனையில் அனுமதி

கர்நாடக மாநிலத்தில் கடந்த இரு வாரங்களாக கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. தினமும் 2500-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு கண்டறியப்படுவதால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தள (மஜத) தலைவருமான தேவகவுடா (87) மற்றும் அவரது மனைவி சென்னம்மா (82) ஆகிய இருவருக்கும் நேற்று கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தேவகவுடா தனது ட்விட்டர் பக்கத்தில், “எனக்கும், என் மனைவிக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் குடும்ப உறுப்பினர்களுடன் எங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். எங்களோடு தொடர்பில் இருந்தவர்கள் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதே வேளையில் எனது உடல்நிலை குறித்து மஜதவினர் அச்சம் அடைய வேண்டாம்’’ என தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே