சென்னையில் இன்று டாஸ்மாக் திறப்பு ; ஏற்பாடுகள் தீவிரம்

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 7-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகளும் திறக்கப்பட்டன.

ஆனாலும் பொது மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையிலும், நோய் தோற்று தீவிரம் காரணமாகவும் சென்னை மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் சென்னை போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் இருக்கும் மதுக்கடைகள் 18-ந் தேதி (இன்று) முதல் திறக்கப்படும் என்றும், மதுக்கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் நேற்று முன்தினம் அறிவித்தது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சென்னை மாநகரில் இதுவரை திறக்கப்படாமல் இருந்த டாஸ்மாக் கடைகளில் தற்போது சீரமைப்பு பணி மற்றும் தூய்மை பணிகள் நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மதுப்பிரியர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் டாஸ்மாக் கடைகள் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. வரிசையில் நின்று மதுபாட்டில்கள் வாங்கிச் செல்லும் வகையிலும் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

அதேபோல டாஸ்மாக் மதுக்கடைகள் முன்பு பிளச்சிங் பவுடர் தெளிப்பது போன்ற தூய்மை பணிகளும் நடந்தன.

டாஸ்மாக் கடைகளில் தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெறுவதை தெரிந்து கொள்ளும் வகையில், சாலைகளில் எங்கு பார்த்தாலும் சவுக்கு கட்டைகள் மற்றும் மூங்கில்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களைத் பார்க்க முடிந்தது.

சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பால் மதுப்பிரியர்கள் குதூகலத்தில் உள்ளனர்.

இனி எல்லை தாண்டி சென்று மது வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் கொரோனா பீதியிலும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சீரமைப்பு பணி நடந்து வருவது அவர்களுக்கு இன்னும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதேவேளை மதுக்கடைகளை மூடியதாலும், மாவட்ட எல்லையை தாண்டி செல்ல வேண்டுமே என்ற எண்ணத்தாலும் மது குடிப்பதை மறந்திருந்த கணவர்கள், ‘பழைய குருடி கதவை திறடி‘ என்பதுபோல மீண்டும் மதுக்கடைகளை சுற்ற தொடங்கிவிடுவார்கள் என்று மனைவிமார்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள்.

மதுக்கடைகள் திறக்கப்பட்டாலும், பார்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

சென்னையில் மதுக்கடைகள் திறக்கும் நடவடிக்கையால் கள்ளச்சந்தையில் மது பாட்டில் விற்பனை இனி இருக்காது என்று தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மாநில பார் உரிமையாளர்கள் சங்க தலைவர் எம்.அன்புச்செல்வன் கூறுகையில், “சென்னையில் மதுக்கடைகள் திறக்கப்படாமல் இருந்த போது மாவட்ட எல்லைகளில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து கள்ளச்சந்தையில் அதிக விலையில் விற்பனை செய்யும் போக்கு இருந்து வந்தது.

தற்போது சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கும் நடவடிக்கையால், இனி கள்ளச்சந்தையில் மது விற்பனை நிச்சயம் இருக்காது. இடைத்தரகர்களின் தலையீடு ஒழிக்கப்படும்” என்றார்.

டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டாலும் சாலையில் நின்று மது அருந்துவது உள்ளிட்ட முகம் சுழிக்கும் செயல்களில் மதுப்பிரியர்கள் ஈடுபடாத வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே