தமிழர் திருநாள் : புது பானையில் பொங்கலிட்டு வழிபட்ட பொதுமக்கள்

உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் தமிழகமெங்கும் இன்று கொண்டாடப்படுகிறது. 

பெருமைமிக்க உழவர்களைக் கொண்டாடும் நாளாக போற்றப்படுவது தைத்திங்கள் முதல்நாள்.

உழவுத்தொழிலுக்கு உதவி செய்த கதிரவனுக்கு நன்றி செலுத்தும் சிறப்பு வாய்ந்த நாள் பொங்கல் திருநாள்.

தமிழ் மக்களின் கலாசார பண்பாட்டு வரலாற்றில் தைப்பொங்கலுக்கு தனி இடம் உண்டு. அதனால்தான் பாரம்பரியத் திருவிழாவாக இதனைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

புத்தாடை அணிந்து, புதுப்பானையில் சர்க்கரைப் பொங்கல் வைத்து கரும்பு பழங்களுடன் கதிரவனுக்குப் படையலிட்டு இந்த நாளை வீடுதோறும் மக்கள் கொண்டாடுகின்றனர்.

பொங்கல் பானை பொங்குவது போல் இல்லம்தோறும் மகிழ்ச்சி பொங்கும் நன்னாளாக இது வரவேற்கப்படுகிறது.

கிராமங்களில் பொங்கலை முன்னிட்டு ஏராளமான கலை மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளும், ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம் போன்றவைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. 

நீலகிரி மாவட்டம் உதகையில் பொதுமக்களுடன் இணைந்து காவல்துறையினர் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர்.

உதகையில் உள்ள அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இவ்விழாவில் கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. பெண் காவலர்கள் இசைக்கு ஏற்றவாறு குத்தாட்டம் ஆடி மகிழ்ந்தனர். 

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சியில் சுகாதாரத்துறை பணியாளர்கள் சமத்துவ பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர். 

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே