அரசு பேருந்து ஊழியர்களிடம் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை..!!

போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தமிழகம் முழுவதும் மூன்றாவது நாளாக தொடரும் நிலையில், தொழிலாளர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது தொழிலாளார் நல ஆணையம்.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கடந்த 25ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு உரிய நிதி, பிற துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம், ஓய்வுபெற்ற ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உட்பட 9 தொழிற்சங்கங்கள் சார்பில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதனால்,குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துக் கழக தொழிற்சங்க பிரதிநிதிகளை தொழிலாளர் நலன் ஆணையம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.

சென்னை டிஎம்எஸ் அலுவலகத்தில், தொழிலாளர் நல ஆணையர் லக்‌ஷ்மிகாந்த் தலைமையில் பிற்பகல் 3 மணியளவில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறும்.

பேச்சுவார்த்தைக்குப் பின்னர், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் குறித்த முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே