உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 2 நாட்களாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

மதுரை மாவட்டம் அவினியாபுரம், பாலமேடு என ஜல்லிக்கட்டு போட்டி நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு துவங்கியது.

ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 700 மாடுபிடி வீரர்கள் மற்றும் 655 காளைகள் பங்கேற்கின்றனர்.

முன்னதாக அலங்காநல்லூரில் முனியாண்டி கோயில் காளைக்கு முதல்வர், துணை முதல்வர் மரியாதை செலுத்தினர். 

பின்னர், மதுரை கலெக்டர் அன்பழகன் உறுதிமொழியை வாசிக்க மாடுபிடி வீரர்கள் ஏற்றனர்.

இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசை வெல்லும் மாடுபிடி வீரருக்கு முதல்வர் பழனிசாமி தரப்பில் கார் பரிசாக அளிக்கப்படுகிறது.

மேலும், பைக், தங்க காசுகள், சைக்கிள், பீரோ, கட்டில், டிவி, பிரிட்ஜ், கிரைண்டர் உள்ளிட்ட பரிசுகளும் மாடுபிடி வீரர்களுக்கு தரப்படுகின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே