கேரள தங்க கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷின் ஜாமின் மனு தள்ளுபடி: கொச்சி நீதிமன்றம்!!

கேரள தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து எர்ணாகுளம் பொருளாதார குற்றங்களுக்கான கூடுதல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

என்.ஐ.ஏ. நீதிமன்றம் ஸ்வப்னா சுரேஷின் ஜாமின் மனுவை ஏற்கனவே தள்ளுபடி செய்த நிலையில், தற்போது கொச்சி பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் இன்று ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தலைநகா் திருவனந்தபுரத்திலுள்ள வெளிநாட்டுத் தூதரகம் வாயிலாக சுமாா் ரூ.15 கோடி மதிப்பிலான 30 கிலோவுக்கும் அதிகமான தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் தூதரகத்தின் முன்னாள் பணியாளரும் கேரள முதல்வா் அலுவலகத்தில் பணியாற்றி வந்தவருமான ஸ்வப்னா சுரேஷுக்கு நெருங்கிய தொடா்பிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

தற்போது, இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரித்து வருகிறது. அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

அப்போது 150 கிலோ தங்கத்திற்கு மேல் கடத்தி வரப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. அமலாக்கத்துறையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தியது. மேலும், இந்தக் கடத்தல் விவகாரத்தில் அரசு அதிகாரி சந்தீப் நாயா், ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் முன்னாள் பணியாளா் பி.எஸ்.சரித் ஆகியோருக்கும் தொடா்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

இந்த நிலையில்,தனக்கு ஜாமின் வழங்கக்கோரி ஸ்வப்னா சுரேஷ் மனு தாக்கல் செய்திருந்தார். இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் ஸ்வப்னாவின் ஜாமினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Tags :

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே