காவல்துறை அதிகாரியின் மகன் என்பதால் என்னைத் தவறாகச் சித்தரிக்கிறார்கள்: விஷ்ணு விஷால் வேதனை

நான் போலீஸ் அதிகாரியின் மகன் என்பதால் மற்றவர்கள் தான் என்னைத் தவறாகச் சித்தரிக்கின்றனர் என்று பத்திரிகையாளர்கள் மத்தியில் விஷ்ணு விஷால் தெரிவித்தார்.

பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா டகுபதி, விஷ்ணு விஷால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காடன்’. கரோனா அச்சுறுத்தலால் தள்ளிவைக்கப்பட்ட இந்தப் படத்தின் வெளியீடு, ஓராண்டுக்குப் பிறகு மார்ச் 26-ம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தைப் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தி வருகிறது தயாரிப்பு நிறுவனமான ஈராஸ் நிறுவனம்.

‘காடன்’ படத்தை விளம்பரப்படுத்த விஷ்ணு விஷால் இன்று (மார்ச் 22) சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்கள், சமீபத்தில் குடியிருக்கும் வீட்டின் அக்கம்பக்கத்தினர் காவல் துறையில் புகார் அளித்தது தொடர்பாகக் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு விஷ்ணு விஷால் கூறியதாவது:

“புகார் என் மீதல்ல. என்னுடைய வீட்டின் உரிமையாளர் மீது புகார் கொடுத்தனர். ஆனால் அதற்குப் பிறகு புகார் கொடுத்தவரிடம் நான் தன்னிலை விளக்கம் கொடுத்து விட்டேன். அதன் பிறகு அவரும் நானும் இன்றுவரை இயல்பாகப் பேசிக் கொண்டிருக்கிறோம்.

அன்று இரவு என்னுடைய அறையில் பணியாற்றும் படத்தின் ஒளிப்பதிவாளருக்கு பிறந்தநாள் என்பதால், அவருக்கு பார்ட்டி கொடுத்தோம். சில தினங்களில் அப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறுவதை முன்னிட்டு முன்கூட்டியே 6 பேர் மட்டுமே கலந்துகொண்ட பார்ட்டி அது. இதை போலீஸிடமும் தெரிவித்து விட்டோம். அவர்களும் விசாரித்துவிட்டு, புகார் கொடுத்தவரிடம் விளக்கம் கொடுத்து விட்டுச் சென்று விட்டனர்.

போலீஸ் அதிகாரியின் மகன் என்பதால், புகார் கொடுத்தவர் ஏதேனும் வேறு வழியில் பழி வாங்கி விடுவாரோ என்ற அச்சம் அவருள் இருந்தது. அந்த அச்சத்தை அவரிடமிருந்து களைந்தேன். தற்போது நட்பு பாராட்டி வருகிறார். நான் போலீஸ் அதிகாரியின் மகன் என்பதால் மற்றவர்கள் தான் என்னைத் தவறாகச் சித்தரிக்கின்றனர். ஆனால் அப்பா எனக்குக் கற்றுக்கொடுத்த பாடங்கள் வேறு. யாருக்கும் துரோகம் செய்யக் கூடாது. யாரேனும் உதவி கேட்டால் உன்னிடம் இருந்தால் உடனடியாக செய்து விட வேண்டும் என்று அடிக்கடி கூறுவார்.

ஒரு தந்தையாக என்னுடைய வளர்ச்சியில் அக்கறை கொண்டவர் என் தந்தை. எனக்காகப் பலரின் காலில் விழுந்ததும் எனக்குத் தெரியும். தற்போது எனக்கு நடந்தவற்றை நினைத்துப் பார்க்கும் பொழுது நான் போலீஸ் அதிகாரியின் மகன் என்பதில் பெருமிதம் அடைகிறேன்.

திறமைசாலி என்பதை நிரூபிப்பதற்காகவே திரைத்துறையில் நீடித்திருக்கிறேன். ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, ‘கதாநாயகன்’, ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ என கமர்சியல் படங்களைத் தயாரித்தேன். இதில் வெற்றியும் கிடைத்தது. தோல்வியும் கிடைத்தது. அதன் பிறகு ‘ராட்சசன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அதுபோன்ற உள்ளடக்கத்துடன் கூடிய திரைக்கதையை நாமே தயாரிக்கலாம் என்ற எண்ணத்துடன் தான் தற்போது ‘எஃப் ஐ ஆர்’, ‘மோகன்தாஸ்’ ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறேன்.

சூரி விவகாரத்தால் அப்பா சம்பாதித்து வைத்த நற்பெயருக்கு நான்தான் களங்கம் கற்பிக்கிறேனோ..! என்ற ஒரு சங்கடமான எண்ணம் எனக்குள் இருக்கிறது. இருந்தாலும் அப்பா சட்டம் ஒழுங்கு பிரிவில் 27 ஆண்டுகாலம் போலீஸ் அதிகாரியாக பல இடங்களில் பணியாற்றியுள்ளார். அவரின் நேர்மையான பணிக்குக் கிடைத்த மரியாதையை நினைத்து நான் தற்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்”

இவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே