மார்ச் 15 முதல் படப்பிடிப்பில் சூர்யா

மார்ச் 15-ம் தேதி முதல் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தொடங்குகிறார் சூர்யா.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் படப்பூஜையுடன் தொடங்கியது. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்

கரோனா தொற்று ஏற்பட்டதால் இதன் படப்பூஜையில் சூர்யா கலந்து கொள்ளவில்லை. கரோனா தொற்றிலிருந்து முழுமையாகக் குணமாகி வீட்டில் ஓய்வில் இருக்கிறார் சூர்யா. எப்போது படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்பது தெரியாமலேயே இருந்தது.

தற்போது மார்ச் 15-ம் தேதி முதல் சூர்யா படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளார். முதலில் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிப்பதற்குத்தான் தேதிகள் ஒதுக்கியுள்ளார் சூர்யா. இதில் சத்யராஜ், ப்ரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

பாண்டிராஜ் படத்தை முடித்துவிட்டு, சிவா இயக்கத்தில் உருவாகும் படத்திலும், ‘வாடிவாசல்’ படத்திலும் மாறி மாறி நடிக்க சூர்யா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே