அயோத்தி வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம்  இன்று காலை 10.30 மணிக்கு  தீர்ப்பளிக்கிறது.

தீர்ப்புக்குப் பின் கொண்டாட்டங்களோ, துக்கம் அனுசரிப்பதோ கூடாது என போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

அயோத்தி நிலம் தொடர்பான விவகாரத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தியது.

40 நாட்கள் நடைபெற்ற விசாரணைக்குப் பின் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது.

இந்நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து உத்தரபிரதேச தலைமை செயலாளர் ராஜேந்திர குமார் திவாரி, டிஜிபி ஓம் பிரகாஷ் சிங் மற்றும் காவல்துறை மூத்த அதிகாரிகளுடன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தமது அறையில் நேற்று ஆலோசனை நடத்தினார்.

அயோத்தி தீர்ப்பு வெளியாகும் போது பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

அதேசமயம் துக்கம் அனுசரிக்கும் வகையிலும் யாரும் செயல்படக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தீர்ப்புக்கு ஆதரவாகவோ, எதிர்ப்பு தெரிவித்தோ எவ்வித விமர்சனங்களையும் வெளியிடக்கூடாது எனவும், தீர்ப்பை விமர்சித்தோ, பாராட்டியோ துண்டு பிரசுரங்கள், பேனர்கள் வைக்கக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக சமூக வலை தளங்களில் அயோத்தி தீர்ப்பு தொடர்பாக யாரும் கருத்துகளை பதிவிடக் கூடாது என்றும் காவல்துறை அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே