மனோகரனுக்கு மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

தமிழகத்தை உலுக்கிய கோவை பள்ளிக்குழந்தைகள் முஸ்கான் மற்றும் ரித்திக் கொலை வழக்கு குற்றவாளி மனோகரன் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

கோவையை சேர்ந்த பள்ளிக் குழந்தைகள் முஸ்கான் மற்றும் ரித்திக் இருவரை கடத்தி கொலை செய்த வழக்கில் குற்றவாளி மனோகரனுக்கு மரண தண்டனையை உறுதி செய்து கடந்த ஆகஸ்டு 1 -ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அந்த தீர்ப்புக்கு எதிராக சீராய் ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

அதன் மீதான தீர்ப்பை கடந்த அக்டோபர் 16 -ம் தேதி ஒத்திவைத்த நீதிபதிகள் இன்று வரை தூக்கு தண்டணையை நிறுத்தி வைத்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.

இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி பாலினாரிமன் தலைமையிலான அமர்வு சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மூன்று நீதிபதிகள் இன்று வழக்கை விசாரித்த நிலையில், இரண்டு நீதிபதிகள் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்யலாம் என்று கூற, ஒரு நீதிபதி தூக்கு தண்டனையை குறைத்து ஆயுள் தண்டனையாக்கலாம் என்று தெரிவித்தார்.

எனினும், பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்தின் அடிப்படையில் மனோகரனின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தற்போது மனோகரன் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். 

அடுத்த கட்டமாக குடியரசு தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இல்லை என்றால் தூக்குத்தண்டனை விரைவில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே