இன்று பிறந்தநாளை கொண்டாடும் கமல்ஹாசன்….

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 65-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதேபோல, திரைப்பயணத்தில் 60 ஆண்டுகால நிறைவையும் கொண்டாடுகிறார்.

1960-ல் வெளியான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் 5 வயது சிறுவனாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார் கமல்ஹாசன்.

தனது முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதைப் பெற்ற கமல்ஹாசன், கலை உலகில் தீராத தாகத்தோடு பயணிக்க ஆரம்பித்தார்.

ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த கமல்ஹாசன், அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலம் கதாநாயகனாக தமிழ்சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.

16 வயதினிலே திரைப்படத்தில் சப்பாணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இந்திய திரையுலகில் தனித்துவம் பெற்றார்.

சிகப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிவப்பு, கல்யாண ராமன், சத்யா திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக வலம் வந்த கமல்ஹாசனுக்கு தேசிய விருதை பெற்று தந்த திரைப்படம்தான் மூன்றாம் பிறை.

85 காலகட்டங்களில் பல வெற்றி படங்களை கொடுத்து வந்த கமல்ஹாசனுக்கு, நாயகன் திரைப்படம் மகுடமாய் அமைந்தது.

வேலுநாயக்கராகவே வாழ்ந்த கமல்ஹாசன், மீண்டும் தேசிய விருதை பெற்றார்.

தமிழ் திரையுலகில் எப்போதுமே வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு வருபவர் கமல்ஹாசன்.

கிராமத்து கதைக்களம் என்றால் தேவர் மகனாகவும், நகைச்சுவை கலந்த திரைப்படம் என்றால் வசூல் ராஜாவாகவும் வந்து நிற்பார்.

தசாவதாரம் திரைப்படத்தில் பத்து அவதாரம் தரித்து கலை உலகில் விஸ்வரூபம் எடுத்த உலகநாயகன், பாபநாசம் படத்தில் சாமானியனாக நடித்து அனைவரின் பாராட்டுகளுக்கும் சொந்தகாரர் ஆனார்.

அரசியல் சார்ந்த கருத்துக்களை அவ்வப்போது கூறி வந்த கமல்ஹாசன், 2018-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை ஆரம்பித்தார்.

2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்று பிற அரசியல் கட்சிகளின் கவனத்தையும் மக்கள் நீதி மய்யம் ஈர்த்தது.

இதுவரை 3 தேசிய விருதுகளையும், 18 திரைப்பட விழா விருதுகளையும் பெற்றுள்ள கமல்ஹாசனுக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது.

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், வசன கர்த்தா, பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட கமல்ஹாசனுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலர் தங்களது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே