BREAKING | நடிகர் ரஜினிகாந்துக்கு எதிரான மனு தள்ளுபடி

ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி திராவிடர் விடுதலை கழகம் தொடர்ந்த வழக்கை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் கடந்த ஜனவரி மாதம் நடந்த துகளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, அவர் சேலத்தில் 1971-ம் ஆண்டு திராவிடர் கழகத்தின் தலைவர் பெரியார் தலைமையில் நடந்த பேரணி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்பட்டது.

இவரது இந்த பேச்சுக்கு பல தரப்பில் இருந்து ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது.

நடிகர் ரஜினிகாந்த் இரு பிரிவினர்களிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாகவும், பொதுஅமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தி சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் விதமாகவும் பேசியதாக அவர் மீது திருவல்லிக்கேணி போலீசில் கடந்த ஜனவரி மாதம் 18-ந்தேதி திராவிடர் விடுதலைக்கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி என்பவர் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால், போலீஸ் கமிஷனரிடம் கடந்த ஜனவரி 20-ந் தேதி புகார் செய்யப்பட்டது.

அதன் பின்னரும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, சென்னை எழும்பூர் 2-வது குற்றவியல் கோர்ட்டில் கடந்த 4-ந்தேதி உமாபதி வழக்கு தொடர்ந்தார்.

போலீஸ் கமிஷனர், திருவல்லிக்கேணி காவல்துறை துணை ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின் துரை முன்பு நேற்று காலை விசாரணைக்கு வந்தது.

அப்போது வியாசர்பாடியைச் சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆறுமுகம் என்பவர் இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

இதனால், இரு தரப்பு வாதங்களையும் மதியம் 2.30 மணிக்கு கேட்பதாக மாஜிஸ்திரேட் ரோஸ்லின் துரை தெரிவித்து மதியம் ஒத்தி வைத்தார்.

மதியம் வழக்கு விசாரணைக்கு வந்தது.

உமாபதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கான்சியஸ் இளங்கோ, “இந்த வழக்கில் 3 நபர் சேரமுடியாது. ரஜினிகாந்த் பேச்சு குறித்து ஏற்கனவே போதிய ஆதாரங்களை சமர்பித்துள்ளதால் தங்கள் மனுவை ஏற்று ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கீட்டு மனு தாக்கல் செய்த ஆறுமுகம் தரப்பில் வழக்கறிஞர் நமோ நாராயணன் ஆஜராகி, “ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர்வதற்கு எந்த முகாந்தரமும் இல்லை. விளம்பரம் தேட மலிவான யுக்தியாக திராவிடர் விடுதலை கழகம் நீதிமன்றத்தை பயன்படுத்துவதால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்ற வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு மாஜிஸ்திரேட் ரோஸ்லின் துரை இந்த வழக்கு குறித்த தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார்.

இன்று ரஜினிக்கு எதிரான இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

ரஜினியின் பேச்சால் எந்த ஒரு சட்டம் – ஒழுங்கு பிரச்னையும் ஏற்படாத நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட முடியாது என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே