குற்றப்பின்னணி உள்ள வேட்பாளர்களின் விவரங்களை இணையத்தில் வெளியிட வேண்டும் : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

வேட்பாளர்களின் குற்றப் பின்னணியை அந்தந்த அரசியல் கட்சிகள் தங்களது இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தோதலில் போட்டியிடும் வேட்பாளா்கள் தங்களது குற்றப் பின்னணி தொடா்பான தகவல்களைத் தேர்தல் ஆணையத்திடமும் பொது வெளியிலும் தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல்சாசன அமா்வு கடந்த 2018-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவு முறையாகக் கடைப்பிடிக்கப்படாததால், மத்திய அரசு, தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளக் கோரி பாஜக தலைவரும் வழக்குரைஞருமான அஷ்வினி உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் ஆா்.எஃப்.நாரிமன், எஸ்.ரவீந்திர பட் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து வந்தது.

இந்த நிலையில், இன்று பிறப்பித்த உத்தரவில்,
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி விவரங்களை, 48 மணி நேரத்தில் அரசியல் கட்சிகள் வெளியிட இணையதளத்தில் வேண்டும்.

மேலும், பிராந்திய நாளேடுகளிலும், சமூக வலைத்தளங்களலும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த விவரங்கள் வெளியிடப்பட வேண்டும்.

வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்து 72 மணிநேரத்தில் தேர்தல் அணையத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

அது மட்டுமல்லாமல், தேர்தலில் போட்டியிட குற்றப் பின்னணி உடையவர்களுக்கு வாய்ப்பு தந்தது ஏன் என்பதையும் அரசியல் கட்சிகள் விளக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், குற்றப்பின்னணி உடைய வேட்பாளர்களின் எண்ணிக்கை கடந்த 4 பொதுத் தேர்தல்களில் அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருகிறது என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை அறிவிக்காத கட்சிகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்டுள்ளது.

குற்றம் சாட்டப்படும் மக்கள் பிரதிநிதிகளைப் பதவி நீக்கம் செய்யும் வகையிலும், அவா்களைக் கட்சியிலிருந்து நீக்கும் வகையிலும் நாடாளுமன்றம் சட்டம் இயற்றலாம் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனா்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே