முதல்வருடன் சுதீஷ் சந்திப்பு – அதிர்ச்சியில் தேமுதிக..

ராஜ்யசபா சீட் தொடர்பாக அதிமுக எந்த ஒரு உறுதியும் தராத போதும் டெல்லிக்கு போவது யாரு என்பது தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வீட்டில் அக்கப்போர் நடந்து வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 26-ந் தேதி நடைபெறுகிறது.

ஒரு ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு 34 எம்.எல்.ஏக்கள் தேவை என்ற அடிப்படையில் தற்போதைய நிலையில் திமுக, அதிமுகவில் தலா 3 எம்.பி.க்கள் தேர்வாக உள்ளனர்.

இதில் அதிமுக கூட்டணியில் தங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட் கேட்டு அடம்பிடிக்கிறது தேமுதிக.

தேர்தல் கூட்டணியின் போதே அதிமுக, ராஜ்யசபா சீட் தருவதாக ஒப்புக் கொண்டது. ஆகையால்தான் ராஜ்யசபா சீட்டை எதிர்பார்க்கிறோம் என்றார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா.

இந்த நிலையில் ராஜ்யசபா சீட் எப்படியும் கிடைத்துவிடும் என்கிற கனவில் இருக்கும் பிரேமலதாவின் சகோதரர் சுதீஷ் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.

இச்சந்திப்பின் போது ஒரு ராஜ்யசபா சீட் தர வேண்டும் என்று சுதீஷ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் எந்த உறுதிமொழியும் அளிக்கவில்லை.

அதிமுகவைப் பொறுத்தவரையில் 3 எம்.பி. சீட்டுகளையும் கட்சியினருக்கு மட்டுமே வழங்குவது என்கிற முடிவில் உறுதியாக இருக்கிறது.

அதிமுக தரப்பு ராஜ்யசபா சீட் தருவதாக உறுதியே அளிக்காத நிலையில் விஜயகாந்த் வீட்டில், டெல்லிக்கு போவது யாரு? என்கிற பிரச்சனை வெடித்திருக்கிறது.

விஜயகாந்த், பிரேமலதா ஆகியோரைப் பொறுத்தவரையில் ராஜ்யசபா சீட் கிடைத்தால் சுதீஷுக்குதான் என கூறியிருக்கின்றனர்.

ஆனால் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனோ, அம்மா நீங்க ஏன் டெல்லிக்கு போகக் கூடாது? மாமா இளைஞரணி வேலையை பார்க்கட்டும் என தூபம் போடுகிறாராம்.

தொடக்கத்தில் பிரேமலதா இதை ஏற்காத நிலையில் தமது அரசியல் எதிர்காலம் கருதி நீங்கள் டெல்லிக்கு போய்தான் ஆகவேண்டும் என்று அம்மா பிரேமலதாவை வலியுறுத்திக் கொண்டிருக்கிறாராம் விஜய பிரபாகரன்.

இது சுதீஷுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறதாம்.

இதை விஜயகாந்த் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் அவர் உணர்த்தியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே