அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் சகோதரர் மகன் செல்வம் திமுகவில் இணைந்தார்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அதிமுக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் அண்ணன் மகன் செல்வம் இன்று திமுகவில் இணைந்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அதிமுக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் உடன் பிறந்த அண்ணன் கே.ஏ.காளியப்பனின் மகன் செல்வம் இன்று திமுகவில் இணைந்தார்.

அவருடன் கோபி கே.ஈ.கதிர்பிரகாஷ், கோபி ஆர்.துரைசாமி ஆகியோரும் திமுகவில் இணைந்தனர்.

திமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வம், “கடந்த 45 ஆண்டுகளாக என் தந்தையும், கடந்த 30 ஆண்டுகளாக நானும் அதிமுகவில் அமைச்சர் அவர்களுக்காக கோபி தொகுதியில் பணியாற்றி உள்ளோம். 

கோபி தொகுதியில் பணியாற்றிய தொண்டர்களுக்கு பல நல்ல விஷயங்களை செய்து கொடுக்க இயலவில்லை என்ற காரணத்தால், நாங்கள் எங்கள் அமைச்சரிடம் இருந்து விலகி இன்றைய தினம் திமுகவில் இணைந்திருக்கிறோம்.

கோபி தொகுதியிலேயே நலதிட்ட பணிகள் சிறப்பாக நடத்திருக்கின்றன. கட்சி தொண்டர்களை கையாள்வதில் குறைபாடுகள் இருக்கின்றன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்தது திமுக ஆட்சி தான் அமையும் என்று இங்குள்ள தொண்டர்கள், புதிய வாக்காளர்கள் உள்பட அனைவரும் எண்ண ஓட்டத்தில் இருக்கிறார்கள்.

குடும்பத்தில் (பெரியப்பா செங்கோட்டையன்) எங்களுக்குள் தனிப்பட்ட முறையில் எந்த விதமாக கருத்து வேறுபாடும் இல்லை. பல குறைபாடு இருக்கிறது. ஆட்சியிலும் பல குறைபாடு இருக்கிறது,.

கொரோனா அச்சுறுத்தலால் அதிக தொண்டர்கள் திமுகவில் இணைய முடியவில்லை. ஆனால் கூடிய விரைவில் பலர் திமுக கட்சியில் இணைவார்கள்.

எங்களை நம்பியுள்ள தொண்டர்களுக்கு நன்மைகளை செய்ய திமுகவில் இணைந்திருக்கிறோம். அதிமுகவில் அடிமட்ட தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளார்கள் என்றார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே