டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக வளாகம் அருகே நடைபெற்ற போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து ஜவஹார்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் காவல்துறை தலைமை அலுவலகம் முன்பு விடிய விடிய தர்ணாவில் ஈடுபட்டனர்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த 13ம் தேதி போராட்டம் நடத்தியதை அடுத்து பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று பல்கலைக்கழக வளாகம் அருகே ஒன்று கூடினர்.

அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி ஜந்தர் மந்தர் நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.

ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சூர்யா ஓட்டல் முன்பு பேரிகார்டுகள் வைத்து போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தியதால், போராட்டக்கார்கள் மாதா மந்திர் சாலை வழியாக ஜந்தர் மந்தருக்கு செல்ல முயன்றனர்.

அப்போது போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றதால் போராட்டம் வெடித்தது.

சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கப்பட்டதோடு, இரண்டு பேருந்துகளுக்கும் தீ வைக்கப்பட்டன. மேலும், இரண்டு பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

போலீசார் பிடியில் இருந்து தப்பிக்க பல்கலைக்கழக வளாகத்திற்குள் தஞ்சம் புகுந்த போராட்டக்கார்களும் கைது செய்யப்பட்டனர்.

அப்போது போராட்டக்கார்களுடன் சேர்ந்து பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த மாணவர்களையும் போலீசார் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் வகுப்பறைகளை போலீசார் சேதப்படுத்திவிட்டதாக மாணவர்கள் வீடியோ வெளியிட்டனர்.

காவல்துறை தடியடி மற்றும் போராட்டக்கார்கள் கல்வீச்சு சம்பவத்தால் 35 பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் இரவில் காவல்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத், ஜமியத் உலேமா இ இந்து அமைப்பின் நிர்வாகி மகமுத் மதானி உள்ளிட்டோர் நள்ளிரவில் போராட்டக்களத்திற்கு வந்து மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஜாமியா பல்கலைக்கழகம் அமைந்துள்ள தென்கிழக்கு டெல்லியில் அசாதாரண சூழல் நிலவியதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டக்கார்கள் ஒன்றுகூடுவதை தடுக்க வசந்த விஹார், ஆர்.கேபுரம் உள்ளிட்ட 15 மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள கதவுகள் மூடப்பட்டுள்ளன.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது பாஜகவினரே போலீசாரை பயன்படுத்தி பேருந்துகளுக்கு தீ வைத்துள்ளதாக மாநில துணை முதலமைச்சர் மணீஸ் சிஷோடியா குற்றம்சாட்டியுள்ளார்.

அது தொடர்பான புகைப்படங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் மணீஷ் சிசோடியா வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையே, உத்தரபிரதேச மாநிலம் அலிகார் பல்கலைக்கழக வளாகத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனால் போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி தாக்குதல் நடத்தியதால் நள்ளிரவில் அசாதாரண சூழல் நிலவியது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே