BREAKING NEWS : குடியுரிமை சட்டம் : டெல்லியில் பேருந்துகளுக்கு தீ வைப்பு..!

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லியில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் 3 பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இப்போராட்டத்தை போலீசார் தொடர்ந்து தடுத்து நிறுத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் கலைந்து செல்ல போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி தடியடி நடத்தினர்.

ஆனால் மாணவர்களின் போராட்டம் நாள்தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் இன்றும் போராட்டம் நடத்தினர்.

ஜந்தர் மந்தரை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற மாணவர்களின் இப்போராட்டத்தில் பொதுமக்களும் பெரும் எண்ணிக்கையில் திரண்டனர்.

இதையடுத்து போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர்புகை குண்டுகளை போலீசார் வீசி தடியடி நடத்தினர்.

இந்நிலையில் திடீரென பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டன. இதில் 3 பேருந்துகள் தீக்கிரையாகின.

பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே