தண்ணீர் திறந்துவிடக் கோரி போராட்டம்..; தடியடி நடத்தி கலைத்த போலீசார்..!!

திண்டுக்கல் அருகே ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு வரும் தண்ணீரை தடுத்து அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்ற வலியுறுத்தி மறியலில் ஈடுபட கிராம மக்களை போலீசார் தடியடி நடத்தி கைது செய்தனர்.

ஆத்தூர் காமராஜர் அணையின் நீர்வரத்து பகுதியில் கட்டப்பட்ட தடுப்பு சுவரால் தண்ணீர் வரத்து இல்லை என்பது பொதுமக்களின் புகார் ஆகும்.

குடிக்க கூட தண்ணீர் இல்லாததால் தடுப்பு சுவற்றை இடிக்க வேண்டும் என்று ஆத்தூர், அனுமந்தராயன் கோட்டை, உள்ளிட்ட 20 கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை வைத்தனர்.

இதன் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து பெண்கள், சிறுவர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பித்தளைப்பட்டி பிரிவில் உள்ள திண்டுக்கல் – தேனி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

ஒரு மணி நேரம் போராட்டம் நீடித்தும் நிகழ்விடத்துக்கு அதிகாரிகள் யாரும் வரவில்லை.

இதனை அடுத்து பொதுமக்கள் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வெங்கம்பூர் அருகே திண்டுக்கல் – மதுரை நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். சுமார் 3 மணி நேரமாக நடைபெற்ற போராட்டத்தின் முடிவில் பெண்கள், சிறுவர்கள் என அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

மறியல் காரணமாக திண்டுக்கல்- தேனி சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே