JUST IN : பேரணியில் பங்கேற்க கமல்ஹாசனுக்கு திமுக அழைப்பு!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தி.மு.க நடத்தும் பேரணியில் கலந்துகொள்வதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தி.மு.க சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றுவருகின்றன.

தமிழகத்திலும், தி.மு.க சார்பில் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்தச் சட்டத்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில், தி.மு.க சார்பில் டிசம்பர் 23-ம் தேதி சென்னையில் கண்டனப் பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேரணியில் தி.மு.க கூட்டணியில் உள்ள 11 கட்சிகள் பங்கேற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களைச் சந்தித்தப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், தி.மு.க நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள அவரது இல்லத்துக்கு தி.மு.க சார்பில் அதன் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் பூச்சி முருகன் சென்று தி.மு.க பேரணியில் பங்கேற்க அழைப்புவிடுத்தனர்.

எனவே தி.மு.க நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் கலந்துகொள்வது உறுதியாகியுள்ளது. கமல்ஹாசனுக்கு காலில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் அவர் பங்கேற்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே