கொரோனா தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்..!!

கொரோனா தடுப்பூசி குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

சென்னை புளியந்தோப்பு அருகே உள்ள செம்பியம் காவலர் குடியிருப்பு வளாகத்தில், காவலர்களின் குடும்பங்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆணையர், நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட உதவி ஆய்வாளர் உயிரிழந்துள்ளது வருத்தமளிப்பதாகத் தெரிவித்தார். இதுவரை சென்னையில் 10 ஆயிரம் காவல்துறையினர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக கூறினார். இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 12 ஆயிரம் காவல்துறையினருக்கு தடுப்பூசிகளை செலுத்த ஏற்பாடுகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும், காவல்துறை சார்பில் சென்னையில் 200 இடங்களில் கொரோனா தடுப்பு முகாம் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நடிகர் மன்சூர் அலிகான் மீது பெறப்பட்ட புகார் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், சென்னையில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது 12 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய அவர் அரசு புதிதாக வழங்கியுள்ள உத்தரவிற்கேற்ப காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்றார். இரவு நேர ஊரடங்கின் போதும், முழு ஊரடங்கின் போதும் சென்னையில் 200 இடங்களில் தடுப்புகள் அமைத்து வாகனத் தணிக்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும், மருத்துவ அவசரத்திற்காக வாகனங்கள் இயங்கும் பட்சத்தில் சோதனைக்குப்பின் அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே