ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற தேவையில்லை என்கிற புதிய உத்தரவை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல் அனுமதியும் மக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டமும் தேவையில்லை என்று, கார்ப்பரேட் அணுகுமுறையுடன் மத்திய அரசு அறிவித்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
வேளாண் மண்டலமாக விளங்கும் காவிரி டெல்டா பகுதியை பாழ்படுத்தி ரசாயன மண்டலமாக அறிவிக்கும் வகையில் பின்னடைவான உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்துக்கொண்டிருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
காவிரி டெல்டாவை பாலைவனமாக்கி, அப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடியோடு நாசப்படுத்தும் இந்த அனுமதிகள் தமிழகத்தை மிக மோசமான சுற்றுச்சூழல் ஆபத்துகளுக்கு உள்ளாக்கும் என்று திமுக தலைவர் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லை என்ற புதிய உத்தரவை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தமது அறிக்கையில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என்று இன்று கூடவிருக்கும் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை முடிவெடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.