திமுக பொதுச் செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டதை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பாராட்டிப் பேசினார்.

அப்போது பழைய நினைவுகளையும், துரைமுருகனுக்கு தயாளு அம்மாள் உதவியதையும் ஸ்டாலின் கூற, துரைமுருகன் கண்ணீர் வடித்தபடி பேச்சைக் கேட்டார்.

திமுக பொதுக்குழு இன்று காணொலிக் காட்சி வழியாகக் கூடியது. அப்போது பேசிய ஸ்டாலின் குரல் தழுதழுக்க ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தினார்.

துரைமுருகன் குறித்துப் பேசும்போது தனக்குத் தனிப்பட்ட முறையில் கட்சி, சொந்தப் பிரச்சினை எதுவாக இருந்தாலும் அவரிடம்தான் பேசுவேன் என்று கூறினார்.

ஸ்டாலின் பழைய கதைகளை வரிசைப்படுத்திப் பேசும்போது துரைமுருகன் உணர்ச்சிவசப்பட்டார்.

தொடர்ந்து தயாளு அம்மாள் உதவியது குறித்துப் பேசும்போது துரைமுருகன் கண்ணீர் வடித்தார்.

கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:

‘அண்ணன் துரைமுருகன் பிறந்த கே.வி.குப்பம் ஊருக்கு அண்ணா வருகிறார்.

அப்போது ஒரு வீட்டில் பேரறிஞர் அண்ணா தங்கியிருக்கிறார். அந்த வீட்டின் ஜன்னல் வழியாக அண்ணாவை அண்ணன் துரைமுருகன் எட்டிப் பார்த்திருக்கிறார்.

அன்று, பேரறிஞர் அண்ணாவை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த துரைமுருகன்தான் இன்றைய தினம் அண்ணா வகித்த பொதுச் செயலாளர் பதவிக்கு வந்திருக்கிறார்.

அதேபோல் நெடுஞ்செழியன் உரையை, ஒரு ஊரில் கேட்டபிறகுதான், தனக்கு திமுக ஈடுபாடு அதிகமாக ஏற்பட்டதாக துரைமுருகன் ஒருமுறை சொன்னார். அப்படிப்பட்ட அண்ணன் துரைமுருகன்தான், இன்றைக்கு நெடுஞ்செழியன் வகித்த பொதுச் செயலாளர் பதவியை அடைந்திருக்கிறார்.

அன்பழகனின் பேச்சு எனக்கு அதிகம் பிடிக்கும் என்று அண்ணன் துரைமுருகன் சொல்லி இருக்கிறார். அத்தகைய பேராசிரியர் வகித்த பொதுச் செயலாளர் பதவியை இன்றைக்கு அண்ணன் துரைமுருகன் அடைந்திருக்கிறார். அண்ணன் துரைமுருகன் அடைந்திருக்கிறார் என்றால் அவர் அந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறார்.

இதில் எனக்கு என்ன பெருமை என்றால் – நான் தலைவராக இருக்கும்போது, அவர் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டு இருக்கிறார் என்பது, தனிப்பட்ட விதத்தில் எனக்குக் கிடைத்த பெருமை!

இன்னும் சொன்னால், அண்ணன் துரைமுருகன் இந்தப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதை என்னுடைய தாயார் தயாளு அம்மாள் அறிந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்.

1970-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அண்ணன் துரைமுருகனை முதன்முதலாகத் தேர்தலில் போட்டியிட தலைவர் கலைஞர் கட்டளையிட்டார்.

ஆனால், அண்ணன் துரைமுருகன் மறுத்தார். ‘நான் வழக்கறிஞராகப் பிராக்டீஸ் பண்ணப் போகிறேன்’ என்று சொல்லி இருக்கிறார்.

அப்போது அருகில் இருந்த தயாளு அம்மாள்தான், ‘ஏன் வேண்டாம்ன்ற? தேர்தலில் நில்லு’ என்று சொல்லி இருக்கிறார்.

‘என்னிடம் பணமெல்லாம் இல்லைம்மா’ என்று அண்ணன் துரைமுருகன் சொன்னபோது, ‘அதெல்லாம் கட்சியில கொடுப்பாங்க’ என்று சொன்னதும் தயாளு அம்மாள்தான். அந்த நம்பிக்கையில் முதன்முதலாக காட்பாடி தொகுதியில் துரைமுருகன் போட்டியிட்டார்.

கட்சி நிதியாக 10 ஆயிரம், தலைவர் கலைஞரின் நிதியாக 10 ஆயிரம், தயாளு அம்மாள் 10 ஆயிரம் என வந்த நிதியை வைத்துத்தான் முதல் தேர்தலில் தேர்தல் பணியை அண்ணன் துரைமுருகன் ஆற்றினார். (இதை ஸ்டாலின் பேசும்போது துரைமுருகன் பலமாகத் தலையாட்டினார், கண்கள் லேசாகக் கலங்கின.)

அன்றைய தினம், நானும் காட்பாடி தொகுதிக்கு வந்து தேர்தல் பிரச்சார நாடகம் போட்டேன் என்பதையும் இந்த நேரத்தில் நினைவூட்டக் கடமைப்பட்டு இருக்கிறேன். அதனால்தான், அண்ணன் துரைமுருகன் திமுகவின் பொதுச் செயலாளராக ஆகிடும் செய்தி, தயாளு அம்மாளுக்குத் தெரிந்தால் மகிழ்ச்சியடைவார் என்று சொன்னேன்’.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

ஸ்டாலின் பேசப்பேச துரைமுருகனின் கண்கள் கலங்கின, அவர் கண்ணாடியைக் கழற்றிவிட்டார். கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தபடி இருந்தது. கண்கள் கலங்கியபடி ஸ்டாலின் பேசுவதையே கவனித்தார்.

இதற்கு முன்னர் கருணாநிதி மறைந்து ஸ்டாலின் தலைவராக பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டபோது அண்ணா, நாவலருக்குச் சொன்ன வார்த்தைகளைச் சொல்கிறேன். ‘தம்பி வா! தலைமை ஏற்க வா! நாங்களெல்லாம் காத்திருக்கிறோம்’ என துரைமுருகன் தழுதழுக்கப் பேசி கண்ணீர் சிந்தினார். அப்போது ஸ்டாலினும் கண்கலங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே