காவல்துறை அதிகாரியால் சீனிவாசன் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம்… மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

சென்னை புழல் அருகே வாடகை வீட்டை காலி செய்ய காவல்துறை மூலம் வலியுறுத்தியதால் சீனிவாசன் என்பவர் தற்கொலை விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை மாநகர காவல் ஆணையர் இதுகுறித்து 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை புழலை அடுத்த விநாயகபுரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது வீட்டில், சீனிவாசன் என்ற பெயிண்டர் குடியிருந்து வந்தார்.

ஊரடங்கால் வருமானம் இல்லாத நிலையில், சீனிவாசன் வாடகை கொடுக்கவில்லை. இதனால், ராஜேந்திரன் பலமுறை வீட்டை காலி செய்யக்கூறியும் சீனிவாசன் அதனை மறுத்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு காவல் ஆய்வாளர் சீனிவாசனை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சீனிவாசன் நள்ளிரவில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். 85 சதவீத தீக்காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார்.

இறப்பதற்கு முன்னதாக சீனிவாசன் அளித்த வாக்குமூலத்தில் காவல் ஆய்வாளர் பென்சாம் தன்னை தாக்கியதாகக் கூறியிருந்தார். புகாரின் அடிப்படையில், ஆய்வாளர் பென்சாம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் இதுகுறித்து செய்தி அறிந்த மாநில மனித உரிமைகள் ஆணையம் சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே