இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான போர் முடிந்த நிலையில் மூன்றாவது அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது.
இதில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் ஆதரவு இம்முறை யாருக்கு என்றும் யார் வெற்றி பெறுவார் என்றும் உலகமே உற்று நோக்கி வருகிறது.
இது குறித்த தொகுப்பை தற்போது அலசுவோம்.
இலங்கையில் யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, அம்பாரை, திரிகோணமலை மற்றும் நுவராஎலியா உள்ளிட்ட ஆறு தேர்தல் மாவட்டங்களில் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கின்றனர்.
இம்மாவட்டங்களில் தமிழர்கள், மலையக தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர்.
மொத்த வாக்குகளில் இந்த பகுதி வாக்குகள் மட்டும் 16 சதவீதம். 2009-ஆம் ஆண்டு போரில் விடுதலைப் புலிகளை தோற்கடித்த முன்னாள் அதிபர் ராஜபக்சவுக்கு இங்கு செல்வாக்கு எப்போதுமே குறைவு.
2010 தேர்தலில் இரண்டாவது முறையாக அதிபராக களம் கண்ட ராஜபக்ச 18.43 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். சிறுபான்மையினர் வசிக்கும் இந்த ஆறு மாவட்டங்களில் 5 லட்சம் வாக்குகள் பெற்றார்.
ஆனால் அவரை எதிர்த்து களம் கண்டு தோற்ற சரத் பொன்சேகாவுக்கு 7.7 லட்சம் வாக்குகள் கிடைத்தன.
எனினும் மொத்தம் 60 லட்சம் வாக்குகள் பெற்ற ராஜபக்ச அதிபரானார்.
2015-ஆம் ஆண்டில் மைத்ரி பால சிறிசேனவிடம் ராஜபக்ச வீழ்ந்தார்.
இதில் சிறுபான்மையினர் மாவட்டங்களில் சிறிசேனவுக்கு 12 புள்ளி 5 லட்சம் வாக்குகள் கிடைத்தன.
ராஜபக்சவுக்கு 5 லட்சம் வாக்குகளே கிடைத்தன.
மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அதாவது 4 லட்சத்து 49 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சிறிசேன வென்றார்.
இந்த வெற்றிக்கு சிறுபான்மையினர் மாவட்டங்களில் கிடைத்த 12 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் முக்கிய காரணமாகும்.
தற்போதைய தேர்தலை பொறுத்தவரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவின் வேட்பாளரும், மகிந்தாவின் தம்பியுமான கோத்தபய ராஜபக்ச மற்றும் அதிபர் சிறிசேனவின் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் சஜித் பிரேமதாசாவுக்குமிடையேதான் கடும் போட்டி.
இலங்கையில் பிறந்து தமிழகத்தில் வளர்ந்தவரான சுப்ரமணியம் குணரத்னம் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகிய இரு தமிழர்களும் களத்தில் உள்ளனர்.
2009-ல் விடுதலைப் புலிகள் சரணடைந்தபோது பாதுகப்புத் துறை செயலராக கோத்தபய ராஜபக்ச இருந்ததால் அவரை சிங்கள இனவாதிகள் ஹீரோ போல் உருவகப்படுத்துவது கூடுதல் பலம்.
மறுபுறம் வழக்கமான வாக்கு வங்கி மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட சில வலுவான சிறுபான்மையின கட்சிகளின் ஆதரவு பிரேமதாசாவுக்கு உள்ளது.
எனினும் புது உத்வேகத்தில் களமிறங்கியுள்ள குணாளன் சுப்ரமணியம் தமிழர் வாக்குகளை பிரிப்பாரோ என்ற அச்சமும் நிலவுகிறது.
சிறிசேனா ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த துறவிகளால் தூண்டப்பட்ட மதக்கலவரம் மற்றும் தேவாலயங்களில் நடந்த குண்டுவெடிப்புகளும் பிரேமதாசாவுக்கு சற்று நெருடலாக இருக்கும்.
இதையெல்லாம் மீறி கோத்தபய மீதுள்ள பயத்தால் சிறுபான்மையினர் வாக்குகளைப் பெற்றுவிடுவோம் என பிரேமதாசா நம்புகிறார்.
மொத்தத்தில் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுள்ளதாலும், ஆளும் கட்சி மீது வழக்கமாக எழும் சலிப்பு போன்றவற்றாலும், சிறுபான்மை வாக்கு சிதறும் அபாயம் உள்ளதாலும் கோத்தபய ராஜபக்சவின் கை சற்றே ஓங்கியிருக்கிறது எனலாம்.