20 ராமேஸ்வரம் மீனவர்களை சிறைப்பிடித்தது இலங்கை கடற்படை..!!

கச்சத்தீவு அருகே நடுக்கடலில் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 20 பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மீனவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

கச்சத்தீவு கடற்பரப்பில் பாரம்பரிய மீன்பிடி உரிமை உள்ள பகுதியில் தமிழக மீனவர்கள் காலம் காலமாக மீன்பிடித்து வருகின்றனர்.

ஆனால் இந்திய எல்லையை தாண்டி தங்கள் நாட்டுக்குள் நுழைந்துவிட்டதாக கூறி தமிழக மீனவர்களை கைது செய்வது, சித்ரவதை செய்வது, சுட்டுப் படுகொலை செய்வது என்கிற இலங்கையின் அட்டூழியங்கள் தொடருகின்றன.

அத்துடன் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடி படகுகளையும் இலங்கை பறிமுதல் செய்து வருகிறது. 

அண்மையில் தமிழகத்துக்கு தேர்தல் பிரசாரம் செய்ய வருகை தந்த பிரதமர் மோடி, இலங்கை சிறையில் ஒரு தமிழக மீனவர் கூட இல்லை; பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் விடுதலை செய்துவிட்டோம் என்றார்.

பிரதமர் மோடி இவ்வாறு பேசிவிட்டு சென்ற பின்னரும் இலங்கையின் அடக்குமுறை தொடருகிறது.

கச்சத்தீவு பகுதியில் இன்று அதிகாலை தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் ராமேஸ்வரம், புதுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள்.

அப்போது அவர்களை நடுக்கடலில் சுற்றி வளைத்த இலங்கை கடற்படை, எல்லை தாண்டி வந்ததாக கூறி 20 மீனவர்களை கைது செய்தது; அவர்களது 2 மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்தது.

தற்போது யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய இடங்களுக்கு தமிழக மீனவர்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தமிழக மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்கு பரிசா? ரவிக்குமார் எம்.பி. கண்டனம்

இதனிடையே இலங்கையின் இந்த அட்டூழியத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார் தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

20 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது ! UNHRC இல் இலங்கையை மறைமுகமாக ஆதரித்த மோடி அரசுக்கு இலங்கை தந்திருக்கும் பரிசா இது?

மத்திய அரசே! அதானியின் WCT திட்டத்துக்காக தமிழக மீனவர்களைப் பணயம் வைக்காதே! கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்துசெய்! மீனவர்களைக் காப்பாற்று ! இவ்வாறு ரவிக்குமார் பதிவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே