ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்காதது உச்சகட்ட துரோகம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சாடியுள்ளார்.

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அந்த நாடு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரிட்டன் உட்பட 6 நாடுகள் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வந்தன.

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தி போர்க்குற்றங்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதுதான் உலகத் தமிழர்களின் கோரிக்கை.

இருப்பினும் சர்வதேச அரங்கில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சிறு நகர்வுகளையும் தமிழர்கள் ஆதரித்து வருகின்றனர். 

இதனால் இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று உலகத் தமிழர்கள் எதிர்பார்த்தனர்.

இத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காமல் புறக்கணித்தது. இருப்பினும் இலங்கைக்கு எதிரான தீர்மானம் 22 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியது.

இந்தியாவின் இந்த அணுகுமுறை இலங்கைக்கு சாதகமானது என தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதேநேரத்தில் வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காதது எங்களை ஆதரிப்பதாகும்; அதனால் இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கிறோம் என இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்திருந்தார்.

இதனிடையே இன்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ளதாவது:

ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தில் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள்’ குறித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் நழுவி இருக்கிறது இந்திய அரசு.

தமிழுக்கும் தமிழர்க்கும் மத்தியஅரசு இதுவரை செய்து வந்த துரோகத்தின் உச்சகட்டம் இது. இவ்வாறு கமல்ஹாசன் சாடியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே