கேரள அணியின் வேகப்பந்துவீச்சாளரான ஸ்ரீசாந்த்தை ஏலப் பட்டியலில் சேர்க்க எந்த ஐபிஎல் அணியும் ஆர்வம் காட்டாததால் இறுதிப் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை.

ஐபிஎல் மேட்ச் ஃபிக்சிங்கில் சிக்கி ஸ்ரீசாந்த் 7 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காத நிலையில் கேரள மாநிலத்துக்காக அண்மையில் நடைபெற்ற சையத் முஷ்டக் அலி கோப்பையில் பங்கேற்று விளையாடினார்.

அந்தத் தொடரில் மொத்தமாக 18 ஓவர்களை வீசிய ஸ்ரீசாந்த் மொத்தம் 4 விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார்.

மேலும் ஒரு ஓவருக்கு 9.88 ரன்களை சராசரியாக கொடுத்தார்.

இதனையடுத்து நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்து இருந்தார் ஸ்ரீசாந்த். 

இதையடுத்து கடந்த வாரம், 1,097 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்திருப்பதாக முதல்கட்டப் பட்டியல் வெளியிடப்பட்டது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் வரும் 18-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

இந்தப் பட்டியலில் இருந்து தங்களுக்கு விருப்பமான வீரர்களின் பெயர்களை அணிகள் தேர்வு செய்தன. இதனால் தற்போது ஏலத்துக்கான இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

292 வீரர்கள் அடங்கிய இறுதிப்பட்டியலில், முதற்கட்டப் பட்டியலில் இடம்பெறாத 17 புதிய வீரர்களும் இடம்பெற்றுள்ளார்கள்.

அணிகளின் கோரிக்கையை ஏற்று இந்த 17 வீரர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. பட்டியலில் உள்ள வீரர்களே ஏலத்தில் கலந்துகொள்வார்கள்.

இந்த இறுதிக்கட்ட வீரர்கள் பட்டியலில் ஸ்ரீசாந்த் பெயர் இடம்பெறவில்லை. இதனையடுத்து ஸ்ரீசாந்தை எடுக்க எந்த அணியும் விரும்பவில்லை என்றே தெரிகிறது.

இந்திய அணிக்காக 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்ரீசாந்த் மொத்தம் 87 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதேபோல 53 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 75 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார்.

தோனி தலைமையிலான அணி 2007 டி20 உலகக் கோப்பையை கைப்பற்றிய அணியில் இடம்பெற்றவர் ஸ்ரீசாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே