நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான தர்பார் திரைப்படம் ரசிகர்களின் பெருத்த ஆரவாரத்துக்கு இடையே இன்று அதிகாலை வெளியானது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் தர்பார்.
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் இன்று உலகம் முழுவதும் திரைக்கு வந்தது.
தமிழக அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்துள்ளதால் சென்னை, திருச்சி, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை, தர்பார் படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது.
இதனால் நள்ளிரவு முதலே, ஏராளமான ரசிகர்கள் திரையரங்குகள் முன் திரண்டதுடன், பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்பார் படத்தை வரவேற்கும் விதமாக பல்வேறு திரையரங்குகளில் ரஜினி ரசிகர்கள் ஏராளமான பேனர்கள், கட்அவுட்கள், தோரணங்கள் அமைத்திருந்தனர்.
மேலும் ரஜினியின் போஸ்டருக்கு பாலாபிஷேகம் செய்ததுடன், கற்பூரம் ஏற்றியும் கொண்டாடினர்.
உலகம் முழுவதும் சுமார் 7,000 திரைகளில், தர்பார் படம் வெளியாகியுள்ள நிலையில், வசூலில் படம் பெரும் சாதனை படைக்கும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சென்னையில் தர்பார் படம் வெளியான திரையரங்கில் பிரமாண்டமான பலூன் பறக்கவிடப்பட்டிருந்தது. படத்தைப் பார்ப்பதற்காக ரஜினி குடும்பத்தினர், இசையமைப்பாளர் அனிருத், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
தர்பார் படம் மாபெரும் வெற்றி அடைய வேண்டி திருநெல்வேலி அடுத்த பாளையங்கோட்டையில் உள்ள திரையரங்கில், புதுப்பானையில் பொங்கலிட்டு வழிபாடு நடத்திய பெண்கள், தர்பார் படம் வெளியான இந்தநாள் தான், தங்களுக்கு பொங்கல் பண்டிகை என ரசிகர்கள் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.
இதனிடையே, தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கையை ஏற்று இன்றும், நாளையும் மற்றும் 13, 14-ஆம் தேதிகளிலும் சிறப்புக் காட்சியை திரையிட அனுமதி அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.