பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்..!!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு குறித்து ஆலோசனை நடைபெறுகிறது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சிறப்பு வகுப்புக்கு முதல்வர் ஒப்புதல் அளித்தவுடன் அட்டவணை வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் இறுதியில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன.

சில நாட்களுக்கு முன்னர் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இருப்பினும் பள்ளிகள் திறப்பில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

இதனால் மாணவர்கள் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை கற்று வருகின்றனர்.

கடந்த ஆண்டில் கொரோனா அச்சத்தால் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அரையாண்டு, காலாண்டு மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.

இம்முறையும் புதிய வகை கொரோனா பரவல், சட்டமன்ற தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் பொதுத்தேர்வு நடத்துவதில் சிக்கல்கள் உள்ளன.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேலும் பூஜ்யம் கல்வியாண்டாக நடப்பு கல்வியாண்டை அறிவிக்க வாய்ப்பில்லை எனவும் உறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் தேர்தல் தேதிகளை பொறுத்தே பொதுத்தேர்வு தேதிகள் முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், சிறப்பு வகுப்புக்கு முதல்வர் ஒப்புதல் அளித்தவுடன் அட்டவணை வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே