தமிழகத்தில் பேரவைத் தேர்தலையொட்டி தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 5 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

போக்குவரத்துத் துறைச் செயலாளர் சி. சமயமூர்த்தி தலைமையிலான கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது:

“5 நாள்களுக்கு சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,225 பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளாக 3,090 பேருந்துகள் என ஆகமொத்தம் 14,215 பேருந்துகள் சென்னையிலிருந்து இயக்கப்படுகின்றன.

மேலும், கோயம்புத்தூர், திருப்பூர், சேலம் மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 2,644 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

மேற்குறிப்பிட்டுள்ள 5 நாட்களில் 01.04.2021 முதல் 03.04.2021 வரையில் நாள்தோறும் இயக்கப்படுகின்ற பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் கோயம்பேடு எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

குறிப்பாக, விடுமுறை நாளான ஞாயிறு (04.04.2021) மற்றும் திங்கள்கிழமை (05.04.2021) ஆகிய இரு நாள்களுக்கு மட்டும் இயக்கப்படுகின்ற பேருந்துகள், பண்டிகை நாட்களான பொங்கல் மற்றும் தீபாவளி நாட்களில் இயக்கப்பட்டது போன்று, பின்வரும் அட்டவணையில் கண்டுள்ள இடங்களிலிருந்து இயக்கப்படுகின்றன.

மேலும், சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு 06.04.2021 முதல் 07.04.2021 வரை தினசரி இயக்கப்படுகின்ற 2,225 பேருந்துகளுடன் 2,115 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும், சேலம், மதுரை, திருச்சி, தேனி ஆகிய இடங்களிலிருந்து திருப்பூர் மற்றும் கோயம்புத்தூருக்கும், சேலம், திருண்ணாமலை, வேலூர் ஆகிய இடங்களிலிருந்து பெங்களூருக்கும் என மொத்தம் 1,738 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இயக்கப்படுகின்ற சிறப்புப் பேருந்துகள் அனைத்தும், தமிழ்நாடு அரசு விதித்துள்ள நோய் தடுப்பு வழிக்காட்டு நெறிமுறைகளான, பேருந்துகளை அவ்வப்போது கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்தல், கட்டாய முகக்கவசம் அணிதல், பயணிகள் உடல் வெப்ப நிலையை வெப்பமானி மூலம் பரிசோதனை செய்தல், கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்டவற்றை பின்பற்றியே பேருந்துகள் இயக்கப்படும்.

இதனை பயணம் மேற்கொள்ள வரும் பொதுமக்களும் தவறாது பின்பற்றி பாதுகாப்பான பயணத்தினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முன்பதிவு வசதி:

சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்கின்ற பொதுமக்கள், கடைசி நேர கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, இணையதள வசதியான www.tnstc.in மற்றும் tnstc official app ஆகியவற்றின் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் செயல்படும் முன்பதிவு மையங்களிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.”

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே