திருவாரூர் மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் 2,383 பேர் முறைகேடாக உதவித்தொகை பெற்று மோசடி

திருவாரூர் மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் மோசடி செய்தவர்களிடம் இருந்து ரூ.17.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் இருக்கும் விவசாயிகளுக்கு கடன் வழங்கும் கிசான் திட்டத்தில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மோசடி நடந்திருப்பது அண்மையில் அம்பலமானது.

மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வேளாண்துறை உத்தரவிட்டதன் பேரில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அதன் முடிவில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் அல்லாதோர் பணம் பெற்றிருப்பதும், அதிகாரிகள் அதற்கு உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய வேளாண்துறை செயலாளர் ககன் தீப், கிசான் திட்டத்தில் தமிழகத்தில் ரூ.110 கோடி மோசடி நடைபெற்றுள்ளதாகவும் மோசடியில் ஈடுபட்ட 80 அதிகாரிகள் இதுவரை சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார். 

அதே போல மோசடியில் ஈடுபட்டவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை திரும்பப்பெறும் முயற்சி முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும்; முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் மோசடி செய்த 2,383 பேரிடம் இருந்து ரூ.17.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே