வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வங்கியில் ரூ.46 கோடி கடன் கேட்ட சுயேச்சை வேட்பாளர்..!!

நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வாக்காளர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக எஸ்பிஐ வங்கியில் ரூ.46 கோடி கடன் கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்காக ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்கு கேட்கும் முறையில் வித்தியாசம், பரப்புரையில் வித்தியாசம் என தனித்துவத்தை காட்டுகின்றனர்.

அந்த வகையில் நாமக்கலில் போட்டியிடும் சுயேச்சை ஒருவர் ரொம்ப வித்தியாசமாக சிந்தித்து வங்கி மேலாளரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.

நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் அஹிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் சார்பில் ரமேஷ் என்பவர் போட்டியிடுகிறார் .

இவர் காந்தி வேடமணிந்து தனது சின்னமான கிரிக்கெட் பேட் மற்றும் ஹெல்மெட்டுடன் நாமக்கல் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிக்கு சென்று வங்கி மேலாளரிடம் மனு ஒன்றை அளித்தார் .

அதில், விஜய் மல்லையா உள்ளிட்டோரின் 68 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தொகையை எஸ் . பி . ஐ வங்கி தள்ளுபடி செய்துள்ளது .

அதேபோல் நாமக்கல் தொகுதியில் 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்யும் வகையில் வாக்காளர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் ஊக்க தொகையாக வழங்க வேண்டும்.

அதனால் நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தமக்கு வெறும் 46 கோடி ரூபாய் மட்டும் மானியத்துடன் கடன் வழங்க வேண்டும் எனவும் அதனை தன்னுடைய வாக்காளர் அடையாள அட்டையை வைத்து வழங்கவேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன், என எழுதியிருந்தார்.

மனுவை வாங்கிப் படித்த வங்கி மேலாளர் அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் சுதாரித்துக் கொண்ட அவர் உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி அந்த மனுவை பரிசீலனை செய்வதாக தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே