திரைத்துறைக்குள் நுழைய வேண்டும், பின்னணிப் பாடகர் ஆகவேண்டும் என எஸ்.பி.பி. நினைத்ததே கிடையாது. அவருடைய கனவு எல்லாம் என்ஜினியர் ஆகவேண்டும் என்பது மட்டுமே. இந்தக் கனவையும் தாண்டித் திரைத்துறையில் தற்செயலாகத்தான் அவர் நுழைந்தார்.
எஸ்.பி.பியின் திறமையை அவர் திரையுலகுக்கு வரும் முன்பே அறிந்துகொண்டவர் ஜானகி.
தெலுங்கு சங்கம் ஒன்று நடத்திய பாடல் போட்டியில் தொடர்ந்து இரு வருடங்கள் முதலிடம் வந்தார் அப்போது இளைஞராக இருந்த எஸ்.பி.பி. மூன்றாவது ஆண்டுக்கான போட்டியிலும் பரிசு வென்றால் ஒரு பெரிய வெள்ளிக்கோப்பை பரிசாகக் கிடைக்கும்.
ஆனால் அந்த ஆண்டுப் போட்டியில் எஸ்.பி.பியால் 2-வது பரிசையே வெல்ல முடிந்தது. பரிசளிப்பு விழாவுக்குத் தலைமை தாங்கியவர் எஸ். ஜானகி. இவரால் போட்டி முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 2-வது பரிசை வாங்கியுள்ள இளைஞர், முதல் பரிசு வென்றவரை விடவும் நன்றாகப் பாடினார். ஆகவே போட்டியின் முடிவுகளை ஏற்க முடியவில்லை என்று வெளிப்படையாகப் பேசினார். இதையடுத்து எஸ்.பி.பி.க்கு முதல் பரிசும் வெள்ளிக்கோப்பையும் கிடைத்தன.
சென்னையில் தானே என்ஜினியரிங் படிக்கிறீர்கள். சினிமாவில் முயற்சி செய்யுங்கள் என்று எஸ்.பி.பி.க்கு ஆலோசனையும் கூறி ஆசை விதையைத் தூவினார்.
அப்போது எஸ்.பி.பி.க்கு 20 வயது கூட ஆகவில்லை. இரு வருடங்கள் திரைத்துறையில் முயற்சி செய்து பார்த்தார். எதுவும் நடக்கவில்லை. பாடகி ஜானகி அன்பினால் சொல்லியிருக்கிறார்கள், நமக்கு எதற்கு இந்த சினிமாவெல்லாம் என முயற்சியைக் கைவிட்டார். படிப்பில் கவனம் செலுத்தினார்.
ஆனாலும் சினிமா எஸ்.பி.பி.யை விடுவதாக இல்லை இசையமைப்பாளர் கோதண்டபாணி இன்னொரு பாட்டுப் போட்டியில் எஸ்.பி.பி.யின் குரலைக் கேட்டு, நீ சினிமாவுக்கு வா என அழைத்துவந்தார். 1966 டிசம்பர் 15 அன்று ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாதை ராமண்ணா என்கிற தெலுங்குப் படத்தில் பாடினார். அப்பாடலின் ஒலிப்பதிவு அந்த நாளில் தான் நடந்தது. அப்போது கூட தான் பெரிய பாடகராக வருவோம் என்கிற பெரிய நம்பிக்கை எஸ்.பி.பி.க்கு இல்லை. அழைத்தார், வந்து பாடினோம். அவ்வளவுதான். அடுத்த வேலையைப் பார்க்கக் கிளம்பிவிட்டார்.
சென்னையில் அப்போது வசித்தாலும் எஸ்.பி.பி.க்குத் தமிழ் தெரியாது. அப்போது எஸ்.பி.பி.க்குத் தெரிந்த மொழிகள் தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் மட்டும்தான்.
1967-ல் 2-வது பாடலை கன்னடத்தில் பாடினார்.
முதல் பாடலைப் பாடும்போது ஒலிப்பதிவில் இசைக்கருவி வாசித்த வீணா ரங்காராவ் என்கிறவர், உடனடியாக 10 நாள்களில் கன்னடத்தில் பாடவைக்கிறேன் என எஸ்.பி.பி.யிடம் கூறியுள்ளார். அப்போது எஸ்.பி.பி.க்கு கன்னடமும் தெரியாது.
பிறகு 1969-ல் தான் எஸ்.பி.பி.யால் தமிழுக்கு வரமுடிந்தது.
அதற்கு முன்பு எம்.எஸ்.வியிடம் பாடிக் காண்பித்துள்ளார். ஆனால் மொழி உச்சரிப்பில் கண்டிப்பாக இருந்துள்ளார் எம்.எஸ்.வி. உன் தமிழ் சரியாக இல்லை. தமிழ் நன்றாகக் கற்றுக்கொண்டு வந்தால் வாய்ப்பு தருகிறேன் என்றார்.
சென்னையில் உள்ள சினிமா போஸ்டர்களை எழுத்துக் கூட்டிப் படித்தார் எஸ்.பி.பி. ஆந்திராவிலிருந்து சென்னைக்கு வந்த புதிதில் கிடைத்த நண்பர்கள் எல்லோரும் தெலுங்கில் பேசக்கூடியவர்களாக இருந்தார்கள். இதற்காக நன்கு தமிழில் பேசுபவர்களிடம் பழக ஆரம்பித்தார் எஸ்.பி.பி. எழுதப்படிக்கக் கற்றுக்கொண்டார். வாய்ப்பு தருவது எம்.எஸ்.வி என்பதால் முழு முயற்சி எடுத்தார்.
ஹோட்டல் ரம்பா என்கிற தமிழ்ப் படத்தில் பாடினார். அது வெளிவரவில்லை. பிறகுதான் சாந்தி நிலையம், அடிமைப் பெண் படங்களில் பாடினார். அடிமைப் பெண் படமும் அவர் பாடிய ஆயிரம் நிலவே வா பாடலும் ஹிட் ஆனதால் தமிழில் பெரிய திருப்புமுனை ஏற்பட்டது.
அடிமைப் பெண் பாடல் ஒலிப்பதிவின்போது உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார் எஸ்.பி.பி. எனினும் எஸ்.பி.பி. தான் அந்தப் பாடலைப் பாடவேண்டும் என்று சொல்லிவிட்டார் எம்.ஜி.ஆர். இதுபற்றி அவரிடம் எஸ்.பி.பி. கேட்டார். அதற்கு எம்.ஜி.ஆர். பதில் அளித்ததாவது: எம்.ஜி.ஆர். படத்துக்குப் பாடுகிறேன் என நண்பர்களிடம் சொல்லியிருப்பீர்கள். இப்போது உங்களுக்குப் பதிலாக வேறொரு பாடகரைப் பாட வைத்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? எனக்கு உங்களின் குரல் பிடிக்கவில்லை என்பதால் தான் பாடகரை மாற்றிவிட்டேன் என வெளியே செய்தி வரும். இந்தத் துறையில் நீங்கள் முன்னேறுவதற்கு அது தடையாக அமையும் எனப் பதில் கூறியிருக்கிறார்.
எஸ்.பி.பி. பாட வருவதற்கு நான்கு வருடங்களுக்கு முன்பே யேசுதாஸ் பாட ஆரம்பித்துவிட்டார். டி.எம்.எஸ். புகழ் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்தது. இந்தக் காலகட்டத்தில் பாட வந்த எஸ்.பி.பி. படிப்படியாக முன்னேறினார்.
இசை இலக்கணம் எதுவும் எஸ்.பி.பி.க்குத் தெரியாது. அப்போது பாடலைப் பாடினால் ரூ. 150, ரூ. 200 ஊதியம் கிடைக்கும். அந்தப் பணம் தந்தைக்கு உதவும் என எண்ணினார் எஸ்.பி.பி. திரைத்துறையில் ஒருபோதும் 50 ஆண்டுகளுக்கு மேல் தாக்குப்பிடிப்பேன் என அவர் எண்ணவில்லை.
பாடகனாக இல்லாதிருந்தால் என்ஜினியர் ஆகியிருப்பேன் என்றுதான் பல பேட்டிகளில் எஸ்.பி.பி. கூறியுள்ளார்.
1970-ல் இளையராஜாவைச் சந்தித்தார் எஸ்.பி.பி. இளையராஜாவின் மூவர் சகோதரர்களும் எஸ்.பி.பி.யும் சேர்ந்து ஒரு இசைக்குழுவை ஆரம்பித்தார்கள். பாவலர் பிரதர்ஸ் ஆர்கெஸ்ட்ரா என இளையராஜா அந்த இசைக்குழுவுக்குப் பெயர் வைத்தார். கொல்கத்தா முதல் கன்னியாகுமர் வரை ஆயிரக்கணக்கான மேடை நிகழ்ச்சிகளில் இவர்கள் பங்கேற்றார்கள். தன்ராஜ் மாஸ்டரிடம் இசை பயின்று வந்த இளையராஜாவை அழைத்துக்கொண்டு ஸ்கூட்டரில் கச்சேரிக்கு அழைத்துச் செல்வார் எஸ்.பி.பி. அந்தக் காலங்கள் மிக இனிமையானவை என்றார் எஸ்.பி.பி.
இளையராஜா வளரும் இசையமைப்பாளராக இருந்தபோது நான் பாடகராகத் திரையுலகில் இருந்ததற்கு மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டிருக்க வேண்டும். – எஸ்.பி.பி. 1980களில் இளையராஜா – எஸ்.பி.பி. கூட்டணி தமிழ்த் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தது. காலத்தால் அழியாத பாடல்களை இருவரும் அளித்தார்கள். இன்றைக்கும் எஸ்.பி.பி.யின் முக்கிய அடையாளங்களாக அந்தப் பாடல்கள் உள்ளன.
90களில் ஏ.ஆர். ரஹ்மான், தேவா, வித்யாசகர், எஸ்.ஏ. ராஜ்குமார் போன்ற இசையமைப்பாளர்களின் இசையில் அவர் ஏராளமான பாடல்களைப் பாடினார்.
ஆந்திராவின் நெல்லூரில் 1946-ம் வருடம் ஜூன் 4 அன்று பிறந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் 1966-ல் தெலுங்குப் படத்தில் பாடியதன் மூலம் பின்னணிப் பாடகராகத் திரையுலகில் அறிமுகமானார். பிறகு கன்னடம், தமிழ், மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் பாடிய எஸ்.பி.பி., ஹிந்திப் படங்களிலும் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். 1969-ல் எம்.ஜி.ஆருக்காக அடிமைப்பெண் படத்தில் ஆயிரம் நிலவே வா என்கிற பாடலைப் பாடி மிகப்பெரிய திருப்புமுனையைப் பெற்றார். 16 மொழிகளில் 40,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். கன்னட இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக 1981 பிப்ரவரி 8 அன்று ஒலிப்பதிவுக்கூடத்தில் ஒரே நாளில் 21 பாடல்களைப் பாடி சாதனை நிகழ்த்தினார்.
ஆறு தேசிய விருதுகள் பெற்ற எஸ்.பி.பி., சங்கராபரணம் என்கிற தெலுங்குப் படத்துக்காக முதல்முறையாகத் தேசிய விருதைப் பெற்றார். 1981-ல் ஏக் துஜே கே லியே படத்தின் மூலம் ஹிந்தித் திரையுலகில் நுழைந்த எஸ்.பி.பி., இதற்காக தனது 2-வது தேசிய விருதைப் பெற்றார். பிறகு இரு தேசிய விருதுகளைத் தெலுங்குப் படப் பாடல்களுக்காகவும் தலா ஒரு தேசிய விருதை தமிழ், கன்னடப் படப் பாடல்களுக்காகவும் பெற்றார். 2001-ல் பத்மஸ்ரீ, 2011-ல் பத்மபூஷன் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.
தமிழில் எம்.ஜி.ஆருக்காக முதலில் பாடிய எஸ்.பி.பி., இறப்பதற்கு முன்பு ரஜினிக்காக அண்ணாத்த படத்துக்காகப் பாடினார்.
எஸ்.பி.பி. பாடிய பாடல்கள் சாகாவரம் பெற்றவை. தமிழர்களின் வாழ்வில் என்றைக்கும் அவற்றுக்கு இடமுண்டு.