செங்கல் சூளை வைத்திருப்போர் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள், நிலங்களை மேம்படுத்த வண்டல் மண் எடுக்கும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, அரசாணையில் திருத்தம் செய்து, மண் எடுப்பதில் விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு நீக்கியுள்ளது.

அதன்படி, மண் எடுப்பதற்கான கட்டணத்தை செலுத்தி மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று மண் எடுக்கலாம். 1.5 மீட்டர் ஆழம் வரை மண் எடுப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கு முன்னதாக சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பின்னர்தான் மண் எடுக்கும் சூழல் இருந்த நிலையில், தற்போது அதற்கான தடையை தமிழக அரசு நீக்கியுள்ளது.

சாலை, பொதுப்பணித்துறை மற்றும் பிற அரசுப் பணிகள் தடையின்றி நடைபெற சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் மண் எடுக்க கடந்த ஜூலை மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனை திருத்தி தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதனிடையே, கடந்த சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “மண்பாண்டத் தொழில் செய்வோா், செங்கல் சூளை வைத்திருப்போா், நிலங்களை மேம்படுத்த வண்டல் மண் எடுக்கும் விவசாயிகள், சாலை மேம்பாடு செய்வோா் மண் எடுக்க அனுமதி தேவையில்லை” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே