ரஜினிகாந்த் ஸ்டைலாக நடிப்பார், விறுவிறுவென வசனம் பேசுவார், பறந்து பறந்து சண்டை போடுவார், இதுதான் ரஜினி. ரஜினியின் இந்த பாணிதான் அவரை சூப்பர் ஸ்டாராக்கியது என்பது பலரது பார்வையாக இருக்கிறது. ஆனாலும்,இந்த கூறுகளையெல்லாம் தாண்டி ரஜினிகாந்த் ஒரு மகா கலைஞன். சிவாஜி,கமல் வரிசையில் வைத்து பார்க்கப்பட வேண்டிய அற்புத நடிகன்.
இன்றோ நேற்றோ அல்ல பைரவி,புவனா ஒரு கேள்விக்குறி,ஆறிலிருந்து அறுபது வரை,எங்கேயோ கேட்டக் குரல் என ரஜினியின் ஆரம்ப காலக்கட்ட படங்களை எடுத்துகொண்டாலே அதில் விரக்தி,தோல்வி,முதுமை,சோகம் என எல்லாவிதமான முதிர்ச்சியான நடிப்பையும் மிக அழகாக வெளிப்படுத்தியிருப்பார் ரஜினிகாந்த்.
கிளாசிக் இயக்குனர் மகேந்திரனால் எதார்த்த கலைஞர் என்று பாராட்டப்பெற்றவர் ரஜினிகாந்த். “முள்ளும் மலரும் படத்தின் காளி கதாபாத்திரத்தை வருங்கால தமிழ் படைப்பாளிகளுக்கு பாடமாக வைக்கலாம். அந்த அளவு கம்பீரத்தையும் கலக்கத்தையும் ஒருசேர இப்படத்தின் பல காட்சிகளில் அசால்ட்டாக வெளிப்படுத்தி அசத்தியிருப்பார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் ஒரு மாஸ் ஹீரோவாக பரிணமித்த பிறகு வெளிவந்த நெற்றிக்கண் படத்தில், பொழுதுபோக்கிற்காக பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் உமனைசர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால் இந்த படத்திலும் கூட பெண்கள் உட்பட அனைத்து தரப்பினரும் விரும்பும் வண்ணம் ரஜினிகாந்த் நடித்திருப்பார். பெண்களுக்கு எதிரான கதாபாத்திரத்தில் நடித்து பெண்களின் அபிமானத்தை பெறுவதெல்லாம் சாதரண கலைஞனுக்கு சாத்தியப்படாது.
தொடர்ந்து மாஸ் மசாலா படங்களில் நடித்து வந்த ரஜினி அந்த இலக்கணங்கள் அனைத்தையும் உடைத்த ராகவேந்திரா படத்திலும் நடித்து தான் ஒரு தேர்ந்த நடிகர் என்பதையும் உறுதி செய்தார். திரையில் தோன்றினாலே எனர்ஜியை கொடுக்கும் ரஜினியா இது என்று அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு துறவியின் உடல் மொழியுடன் ரஜினி நடித்து அசத்திய படம் ராகவேந்திரா.
கலை சார்ந்த படங்கள் என்றில்லாமல் அண்ணாமலை, பாட்ஷா போன்ற கமர்ஷியல் படங்களை எடுத்துகொண்டாலும் அதிலும் நட்சத்திரமாக ரஜினி ஜொலிப்பார். அண்ணாமலை படத்தில் சவால்விடும் காட்சியில் ரஜினி காட்டும் ஆவேசமும்.. பாட்ஷா படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளில் வரும் கம்பீரமும்.. நகலெடுக்க முடியாத ஒரு அதிசய கலைஞன் ரஜினி என்பதை உணர்த்தும்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்ஷன் படங்களில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வந்த ரஜினி சமீபத்தில் வெளிவந்த கபாலி, காலா போன்ற படங்களில் செண்டிமெண்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தார். அந்தவகையில் ரசிகர்கள் நீண்ட நாட்கள் மறந்து போயிருந்த ரஜினி எனும் கிளாசிக் நடிகனை கபாலியில் மீண்டும் மீட்டெடுத்து கொடுத்தார் ரஞ்சித்.
இந்நிலையில் தனது 71 வது பிறந்த தினத்தை அவர் இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி ரஜினிகாந்த் பவுண்டேஷன் மூலமாக 100 ஏழை மாணவர்களுக்கு TNPSC தேர்வுக்கு பயிற்சி அளிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அவர் ரசிகர்கள் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகின்றனர். அன்னதானம், ரத்ததான முகாம் உள்ளிட்ட முகாம்களையும் நடத்தி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் #HBDSuperstarRajinikanth என்ற ஹேஷ்டேக்கை அவர் ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர். அவருக்கு நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
குணசித்திரம், வில்லன், ரொமான்ஸ், காமெடி, அப்பாவி, ஆக்சன் என இதுவரை ரஜினி ஏற்காத பாத்திரங்களே கிடையாது. ரஜினி என்றால் கமர்சியல் ஹீரோ என்ற வட்டத்திற்குள் அடைத்து பார்க்கும் பார்வை பலரிடம் இருக்கிறது. ஆனால் ரஜினி சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல கடந்த 46 ஆண்டு கால சினிமாவில் சூப்பர் நடிகரும் கூட என்பதை எவராலும் மறுக்க முடியாது.