அரசியலை விட்டே விலகத்தயார் – எஸ்.பி. வேலுமணி சவால்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் பலிக்காத நிலையில், அதனை மறைக்க மணலை கயிறாக திரிக்கும் முயற்சியில் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டிருப்பதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் பணிகள் முறையாக ஆன் லைன் மூலம் கோரப்பட்டு விதிகளுக்கு உட்பட்டு ஒப்பந்த புள்ளிகள் முடிவு செய்யப்படுவதாக விளக்கம் அளித்துள்ளார்.

அவ்வாறு முடிவு செய்யப்பட்டு கடந்த 2017-2018 மற்றும் 2018-2019ம் ஆண்டுகளில் ஆற்றுமணல், எம்-சேண்ட் கலந்த சிமெண்ட் கலவைகள் கொண்டு ஆயிரத்து 164 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எஸ்.பி.வேலுமணி குறிப்பிட்டுள்ளார்.

இதில் 32 கோடியே 67 லட்சம் அளவிலான கான்கிரீட் பணிக்கு மட்டுமே எம்-சேண்ட் அல்லது ஆற்று மணல் பயன்படுத்தப்பட்ட நிலையில், ஆயிரம் கோடிக்கு முறைகேடு நடந்திருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது கடைந்தெடுத்த பொய் என்றும் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் வெறுமனே குற்றச்சாட்டுகளை கூறாமல் தக்க ஆதாரத்துடன் பேச வேண்டும் என்றும்; அப்படி ஆதாரம் இருக்கும் என நம்பினால் இன்றே பதவியை ராஜினாமா செய்யத் தயாராக உள்ளதாகவும் கூறினார்.

குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை என்றால் திமுக தலைவர், எதிர்க்கட்சி தலைவர் பதவியை துறந்துவிட்டு, அரசியலில் இருந்தே ஒதுங்கிப் போக வேண்டும் என்றும் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே