புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய காங்கிரஸ் எம்எல்ஏ

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பதவி விலக கோரி ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ஒருவர் 500க்கும் மேற்பட்டோருடன் பேரணியாக சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி மற்றும் முதலமைச்சர் நாராயணசாமி இடையே அதிகார மோதல் நீடித்து வருகிறது.

இதனால், நலத்திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகள் இருப்பு இல்லை என்றும், ஆம்புலன்சுக்கு டீசல் கூட போட முடியாத நிலை இருப்பதாகவும் ஆளும் கட்சியை சேர்ந்த பாகூர் தொகுதி எம்எல்ஏ தனவேலு குற்றஞ்சாட்டியுள்ளார்.

மக்களின் உயிருடன் புதுச்சேரி அரசு விளையாடுவதாக கூறி 500க்கும் மேற்பட்டோரோடு பேரணியாக சென்று பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு அவர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், முதலமைச்சர் நாராயணசாமி பதவி விலகவில்லையெனில் தம்மை போன்று பல எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்த தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவரே, முதலமைச்சருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பது புதுச்சேரி மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே