தமிழகத்தில் கோவை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், திருக்கோவிலூர் அருகே கீழையூர் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்குச் செருப்பு மாலை அணிவித்து அவமரியாதை செய்தவர்களை கண்டறிந்து கைது செய்யவேண்டும் என பெரியாரிய அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் விசாரணை நடந்து வருகிறது என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெரியார் சிலையை அவமரியாதை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி பெரியார் அமைப்பினர், கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, அரசியல்கட்சி தலைவர்கள் ஸ்டாலின், ராமதாஸ், வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
பெரியார் சிலை அவமரியாதை குறித்து, ஈரோட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டபோது, யார் தவறு செய்திருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.