உத்தரபிரதேசத்தில் கொரோனாவால் உயிரிழந்தவரை ஆற்றில் வீசும் அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரப் பிரதேசத்தில் பிபிஇ உடை அணிந்த ஒருவர் உள்பட இரண்டு நபர்கள் கரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை பாலத்திலிருந்து ஆற்றில் தூக்கி வீசும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

பாலத்தின் வழியே வாகனத்தில் சென்றவர்களால் இந்த விடியோ எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகத் தொடங்கியதையடுத்து, காவல் துறையினர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுபற்றி பல்ராம்பூர் தலைமை மருத்துவ அதிகாரி விஜய் பகதூர் சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது:

“ஆற்றில் தூக்கி வீசப்பட்ட உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரேம் நாத் மிஸ்ரா. 

அவருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மே 25-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மே 28-ம் தேதி உயிரிழந்தார்.

கரோனா வழிமுறைகளுக்குட்பட்டு அவரது உடல் குடும்ப உறுப்பினர்களிடமே ஒப்படைக்கப்பட்டுவிட்டது.

சமூக ஊடகங்களில் வைரலாகும் விடியோவில், அவரது உடல் ரப்தி நதியில் வீசப்படுவதைப் பார்க்கலாம். இதுதொடர்பாக கோட்வாலி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே