கேரள மாநிலம் இடுக்கியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், 10 பேர் இடிபாடுகளிலிருந்து காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக கேரள போலீசார் தகவல் அளித்துள்ளனர். தற்போது மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு பணியில் ஈடுபட்டு வருகிறது.
தீயணைப்பு, வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 15 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கேரள சுகாதார அமைச்சர் சைலஜா தகவல் அளித்துள்ளார். மீட்பு பணிகளுக்காக ஹெலிகாப்டர் வழங்க விமானப்படைக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கேரளாவில் பருவகால மழைப்பொழிவை முன்னிட்டு பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால், நகரங்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடி வழிகிறது. இந்த நிலையில், இடுக்கி ராஜமலை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
வயநாடு, இடுக்கி உள்ளிட்ட பகுதியில் கனமழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து இடுக்கி ராஜமலை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் 20-க்கும் மேற்பட்டோர் சிக்கி இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. ராஜமலை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் தற்போது 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.