செந்தில் பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

பணம் பெற்றுப் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறிய புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சரும், கரூர் திமுக வேட்பாளருமான செந்தில்பாலாஜி உள்ளிட்ட 47 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த 2011-15ஆம் ஆண்டுகளில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜியின் பெயரைக் கூறி, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக, ஒரு கோடியே 62 லட்ச ரூபாய் பெற்று மோசடி செய்ததாக கணேஷ்குமார், தேவசகாயம், அருண்குமார் உள்ளிட்டோர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில், செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் ஆகிய நால்வர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

எழும்பூர் நீதிமன்றத்தில் இருந்த இந்த வழக்கு சென்னை எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

அந்த வழக்கில் முதலில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் முக்கியக் குற்றச்சாட்டுக்கு உள்ளான செந்தில்பாலாஜி, பணம் பெறுவதற்கு உதவிய பி.சண்முகம், எம்.கார்த்திகேயன் மற்றும் போக்குவரத்துக் கழகங்களின் மூத்த அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெறவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் காவல்துறை விரிவான விசாரணை மேற்கொண்டது.

அந்த வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில், சென்னை மத்திய குற்றப்பிரிவினர் புதிதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

அதில் முன்னாள் அமைச்சரும் கரூர் தொகுதி திமுக வேட்பாளருமான செந்தில்பாலாஜி, பி.சண்முகம், எம்.கார்த்திகேயன், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற நிர்வாக இயக்குனர் டி.ஆல்பிரட் தினகரன், இணை நிர்வாக இயக்குனர் வி.வரதராஜன், முன்னாள் மூத்த துணை மேலாளர் எஸ்.அருண் ரவீந்திர டேனியல், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிர்வாக இயக்குனர் ஜி.கணேசன் மற்றும் பணியாளர் நியமனங்களை மேற்கொண்டோர் என 47 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது

இதையடுத்து வழக்கு விசாரணை ஏப்ரல் 9-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே