தமிழ் மாநில கட்சியின் தலைவரும் முன்னாள் சென்னை வழக்கறிஞர்கள் சங்க தலைவருமான பால் கனகராஜ் பாஜகவில் இணைந்தார்!

பரபரப்புகளை தந்தே தெறிக்க விட்டுக் கொண்டிருந்த ஆர்சி பால்கனகராஜ் பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்..

சென்னை ஹைகோர்ட்டின் பிரபல வழக்கறிஞர் ஆர்.சி. பால்கனகராஜ்… சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிட்டு சங்கத் தலைவராக வெற்றி பெற்றவர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் உறுப்பினராகவும் வெற்றி பெற்றார் அதன்பிறகு பார்கவுன்சில் தலைவர் தேர்தலில் போட்டியிட்டார். 

இவர் ஒரு அரசியல்வாதியும்கூட… தனியாக தமிழ் மாநில கட்சி என்ற ஒரு கட்சியை ஆரம்பித்து நடத்தியும் வருகிறார்..

இந்நிலையில், இன்று தமிழக பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார்.. தன்னுடைய தமிழ் மாநில கட்சியையும் பாஜகவில் இணைத்துள்ளார்..

இந்த இணைப்பு விழா, சென்னை அமைந்தகரையில் உள்ள லட்சுமி திரையரங்கத்தில் உள்ள ஒரு ஹாலில் நடந்தது..

கட்சியில் இணையும் பால் கனகராஜுக்கு வழக்கறிஞர் அணி தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் பேசிய பால்கனகராஜ், “சுயநலத்துக்காக பாஜகவில் இணையவில்லை.. பாஜக ஆட்சியில் தான் மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர்…

நிம்மதியான வாழ்வை வழங்கும் ஆட்சியாக பாஜகவின் ஆட்சி உள்ளதால், அதில் இணைந்துள்ளேன். சாமானியர்களுக்கான ஆட்சி நம் மோடியின் ஆட்சி” என்று புகழாரம் சூட்டினார்.

தமிழக பாஜகவை பொறுத்தவரை பால் கனகராஜின் வருகை மிகப் பெரிய விஷயமாக பார்க்கப்பட வேண்டியதாகும். பரபரப்புக்கு பஞ்சம் இல்லாதவர் இவர்..

கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் தேர்தலின்போது, ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டார்.. பிறகு தோல்வியை சந்தித்தார்.

அதுபோல, ஜெ. மறைவுக்கு பிறகும் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, போட்டியிடுவதாக அறிவித்தார்..

ஆனால், போட்டியிடாமல், தனது கட்சி, ஓபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவு அளிக்கும் என்றார்.

இந்த நிகழ்வுகள் எல்லாம் அந்தந்த காலக்கட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் அதற்கு முன்பே இவர் திமுகவில் இருந்தவர்.. அக்கட்சியில் வழக்கறிஞர்கள்-போலீசார் மோதலின்போது, மாநில அரசின் அணுகுமுறையை கண்டித்து திமுக வழக்கறிஞர்கள் அணியிலிருந்து விலகுவதாக அறிவித்தவரும்கூட..

திமுகவின் பல்வேறு வழக்கு விசாரணை சமாச்சாரங்களை இவர் நன்கு அறிந்திருந்தவர்.. இப்போது இவரை தங்கள் பக்கம் பாஜக இழுத்து கொண்டுள்ளது சிறந்த ராஜதந்திரமாகவே பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் பலர் கட்சியில் இணைந்திருந்தாலும் கூட வழக்கறிஞர்கள் மத்தியில் செல்வாக்கு மற்றும் தாக்கத்தை கொண்டவரான, பொறுப்பான பதவியில் இருப்பவருமான பால் கனகராஜ் வந்து இணைவது அக்கட்சிக்கு நிச்சயம் பலமான அம்சமாகவே பார்க்கப்பட வேண்டியதாகும்.

நிச்சயம் தீவிரமாக செயல்படக் கூடியவர் என்பதால்தான், இவரை பயன்படுத்தி கொள்ள பாஜக முடிவு செய்தது..

இது எல்லாவற்றிற்கும் மேலாக சட்ட ரீதியான பிரச்சினைகளில் இவரது அனுபவம் பாஜகவுக்கு நிச்சயம் பயன்படும் என்பதுடன், திமுகவுக்கு எப்படியெல்லாம் செக் வைக்கலாம் என்பதற்கும் பயன்படும் என திடமாக தமிழக பாஜக நம்புவதாகவே தெரிகிறது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே